சுதந்திர தினச் சிந்தனை : தேவை தேசபக்தி!

பாரதம் சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில்தான் இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது. 1947 – க்கு முன்பு வரை உலக வரைபடத்தில் ‘இஸ்ரேல்’ எனும் ஒரு நாடு இருந்ததில்லை. 1948 – ல் தான் யூதர்களுக்கென்று ஒரு நாடு ‘இஸ்ரேல்’ கிடைத்தது. இஸ்ரேலைச் சுற்றி ஏராளமான முஸ்லீம் நாடுகள். இஸ்ரேலை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கின. இஸ்ரேல் எல்லோருக்கும் ‘பெப்பே’ காட்டியது. இஸ்ரேல் முன்னேற்றத்திற்குக் காரணம் அந்த நாட்டு மக்களின் தேசபக்தியே.

ஜப்பான் இரண்டாவது உலகப் போரில் அணுகுண்டு வீச்சால் தரைமட்டமாகியது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் சுமார் 4 லட்சம் மக்கள் பலியானார்கள். அதற்குப் பிறகும் கூட பல ஆண்டுகள் அணுவீச்சு தாக்குதல் காரணமாக குழந்தைகள் ஊனமாக பிறந்தன. ஆனாலும் சஞ்சீவினியால் பலர் உயிர் பெறுவது போன்று எழுச்சி பெற்ற ஜப்பான் இன்று உலக வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஜப்பானின் முன்னேற்றத்திற்கு அந்த நாட்டு மக்களின் தேசபக்தியே காரணமாகும்.

நம்ம நாட்டு மக்களின் தேசபக்தியும் யாருக்கும் சளைத்தது இல்லை. ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து தூக்குமேடை ஏறியவர்கள் ஏராளம். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தின் ருசியைப் பார்த்த பிறகு தடம் மாறியது. லஞ்சம், ஊழலில் ஊறித் திளைத்தது. இதையெல்லாம் எதிர்பார்த்துதான் காந்திஜி சுதந்திரம் பெற்ற உடனேயே காங்கிரசை கலைக்கச் சொன்னாரோ? திலகரும், நேதாஜியும், காந்திஜியும் வளர்ந்த காங்கிரஸ் இன்று இத்தாலி சோனியாவின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிந்து வருகிறது.  இது ஒரு புறம்.

மறுபுறம் வ.உ.சி. பாரதி, வாஞ்சி, திருப்பூர் குமரன், வ.வே.சு. அய்யர் போன்ற தேசபக்தர்கள் பிறந்த தமிழ் மண்ணில் பிரிவினைவாத குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. திமுக, அதிமுக மட்டுமல்லாமல், சீமான், வை.கோ, திருமா, வீரமணி, ராம்தாஸ் போன்றோரும் தேசியத்திற்கு உலைவைக்கும் வேலைகளில் இறங்குகிறார்கள்.

பாரதம் 70 – வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் தேசம் காப்போம், தெய்வம் காப்போம் என்று சபதமேற்போம். தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கமே என்று சூளுரைப்போம்.