‘கொரோனா° வைரஸ் பாதிப்பு சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சீனர்கள் மற்றும் சீனாவுக்கு சென்ற வெளிநாட்டவர், இந்தியாவுக்குள் நுழைவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது. சீனாவின் வூஹான் நகரில் படிக்கும், கேரளாவைச் சேர்ந்த, மூன்று மாணவர்களுக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, இந்த வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து வரும் சீனர் மற்றும் வெளிநாட்டவர், இந்தியா வந்த பிறகு விசா பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதைத் தவிர, இ – விசா எனப்படும் ஆன்லைன் மூலம் விசா வழங்குவதும் நிறுத்தப்பட்டது.விசாக்கள் ரத்துஇந்த நிலையில், விமான போக்குவரத்துத் துறை டைரக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சீனாவுக்கு, இந்தாண்டு, ஜன., 15க்கு பிறகு பயணம் மேற்கொண்டுள்ள எந்த வெளிநாட்டவரும், இந்தியாவுக்குள் வருவதற்கு முழு தடை விதிக்கப்படுகிறது.
இது சீனர்கள் மற்றும் மற்ற வெளிநாட்டவருக்கு பொருந்தும்.விமானம், கப்பல் மூலமாகவோ, நேபாளம், பூட்டான் வங்கதேசம், மியான்மார் நாடுகளுடனான எல்லை வழியாகவோ இந்தியாவுக்குள் வருவதற்கு முழு தடை விதிக்கப்படுகிறது.அதேபோல் சீனாவில் இருந்து இந்தியா வருவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன; அது தொடர்கிறது.
அதே நேரத்தில், சீனாவில் இருந்து வரும் விமானத்தில் உள்ள விமானி உள்ளிட்ட ஊழியர்கள், சீனர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.’இண்டிகோ, ஏர் இந்தியா’ ஆகிய விமான நிறுவனங்கள், சீனா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கான விமானச் சேவையை ஏற்கனவே நிறுத்தியுள்ளன.
அதேநேரத்தில், ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனம், டில்லி – ஹாங்காங் சேவையை மட்டும் தொடர்கிறது.’நாடு முழுவதும், 1,449 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 1,446 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
20வது இடத்தில் இந்தியா
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த ஹம்போல்ட் பல்கலை மற்றும் ராபர்ட் கோச் மையம் ஆகியவை இணைந்து வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:விமானப் போக்குவரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, எந்த நாட்டுக்கு, இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் பரவக் கூடும் என்று கணக்கிட்டு உள்ளோம்.
அந்தப் பட்டியலில், இந்தியா, 17வது இடத்தில் உள்ளது. அதாவது, இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு, இந்தியாவுக்கு, 0.219 சதவீதம் உள்ளது.உதாரணத்துக்கு, சீனாவின் ஹோங்சு விமான நிலையத்தில் இருந்து, வைரஸ் பாதிக்கப்பட்ட ஆயிரம் பயணியர் புறப்பட்டால், அவர்களில் இரண்டு பேர் இந்தியாவுக்கு பயணிக்கின்றனர். இதன் அடிப்படையில், இந்தியாவுக்கு, 0.219 சதவீதம் பாதிப்பு வரலாம்.
இந்தியாவில், டில்லி, மும்பை, கோல்கட்டா விமான நிலையங்கள், இந்த வைரஸ் தாக்குதலை இறக்குமதி செய்யும் அபாயத்தில் உள்ளன. அதற்கடுத்த இடங்களில், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பயணம் ரத்துசுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சீனாவைச் சேர்ந்த குழுவினர், கோவாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவா சுற்றுலாத் துறை செய்திருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், இந்த பயண திட்டத்தை, கோவா அரசு ரத்து செய்துள்ளது.
பலி, 800ஐ தாண்டியது
நம் அண்டை நாடான சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு, 37 ஆயிரத்து, 198 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; பலியானோர் எண்ணிக்கை, 811ஆக உயர்ந்தது.நேற்று ஒரு நாளில் மட்டும், 89 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக, 2,656 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 37 ஆயிரத்து, 198 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மட்டும், ஹூபய் மாகாணத்தைச் சேர்ந்த, 324 பேர் உள்பட, 600 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, சீனா முழுவதும், 2,649 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது.வங்கதேசம் கைவிரிப்புநம் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள வூஹான் நகரம் உள்ளிட்ட இடங்களில் சிக்கி தவிக்கின்றனர். சமீபத்தில், வங்கதேசத்தின், ‘பிமன் ஏர்லைன்ஸ்’ விமானம் மூலம், 312 வங்கதேசத்தவர், திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், வூஹானில் உள்ள, மேலும், 171 பேரை அழைத்துச் செல்லும் முயற்சியில், வங்கதேச அரசு ஈடுபட்டது. ஆனால், வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால், இதற்கு விமானிகள் மறுத்துவிட்டனர். அதையடுத்து, இந்த திட்டத்தை தற்காலிகமாக வங்கதேச அரசு ஒத்தி வைத்துள்ளது.சீனாவில் இருந்து விமானம் மூலம் வந்த, ஐந்து பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், நான்கு பேர் பாகிஸ்தானியர்; ஒருவர் சீனர்.
விமான கண்காட்சியில் விலகல்
ஆசிய நாடான சிங்கப்பூரில், ஆறு நாள் விமானக் கண்காட்சி, நாளை துவங்குகிறது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் பரவி வருவதால், 70 நிறுவனங்கள், இந்தக் கண்காட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன. இதில், 12 நிறுவனங்கள், சீனாவை சேர்ந்தவை.இருப்பினும் திட்டமிட்டபடி, கண்காட்சி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.