சீனப் பொருட்களை பகிஷ்கரிப்போம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சமீபத்தில் சீனா சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார்.

சில பத்திரிகைகள் சீனாவிடம் உள்ள ராணுவ பலம், இந்திய ராணுவ பலம் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றன. போதாக்குறைக்கு பொது கணக்குக் குழு (இ.அ.எ) போர் வந்தால் நமது ராணுவ தளவாடங்கள் பத்து நாளைக்குத்தான் தாக்குப்பிடிக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இது சாதாரண பொதுமக்களிடையே பீதியைத்தான் உருவாக்கும்.

இஸ்ரேலைச் சுற்றி 17 அரபு நாடுகள் உள்ளன. ஒரு சமயம் எகிப்தின் அதிபராக இருந்த நாசர், உலக வரைபடத்திலிருந்தே இஸ்ரேலை அகற்றி விடுவோம் என்று சூளுரைத்தார். அப்போது இஸ்ரேல் பிரதமராக இருந்த பெண்மணியான கோல்டா மேயர், அரபு நாடுகளின் ஆணவத்தை சுக்கு நூறாக்குவேன் என்று சொன்னது மட்டுமல்ல, செய்தும் காட்டினார்.

ராணுவ பலம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நாட்டின் தலைமைப் பொறுப்பில் யார் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. இப்போது ஆட்சியில் பிரதமராக இருப்பது ஜவஹர்லால் நேருவோ, மன்மோகன் சிங்கோ இல்லை.

பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு விஜயம் செய்தபோது கிண்டலும் கேலியும் செய்தவர்கள், இன்று அவரின் ராஜதந்திரத்தை நினைத்து மெய்சிலிர்க்கிறார்கள். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற எண்ணற்ற நாடுகளை நட்பு நாடாக்கியுள்ளது மோடியின் அபார சாதனை.

அரசு ரீதியாக முடிவெடுக்க மத்தியில் வலுவான தலைமை இருப்பது நல்ல விஷயம். நம்மால் (மக்கள்) செய்ய வேண்டியது சீனப் பொருட்களை பகிஷ்கரிப்பது.