7. நஞ்சிலிருந்து காக்கும் நாஞ்சில் நாடன்
மீனாட்சிக் கோயிலின் மேற்கு கோபுர வீதி. இந்த வீதியில் உள்ளது பெருமை வாய்ந்த சென்ட்ரல் தியேட்டர். இந்தத் தியேட்டர் எதிரே உள்ள வீதியில் நம் குடியிருப்பு. வீதி என்று சொல்வது கௌரவம் கருதி, சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் முன்னாள் மாட்டுத் தொழுவம்.
தொடக்கத்தில் பஜனை மடம் போல் ஒரு வீடு. வாசலில் பூசாரி ஆதி கிழவன் வீடு என்று பெயர் எழுதி இருக்கிறது. இரவில் வேலை முடிந்து, அறைக்குத் திரும்புவேன். முக்கால்வாசி நாட்களில், தெருவை அடைத்துக் கொண்டு பந்தல் போட்டிருக்கும். ஆணும், பெண்ணுமாய் அடைசல் கூட்டம். முண்டாசுத் தலையோடும், கையில் ஒரு கத்தியோடும் கண்மூடிய நபர் ஒருவர். அத்தனைக் கும்பலிலும் அவருக்கு மட்டும் இடம் ஒதுக்கி இருக்கும். “எம்புள்ளைக்கு என்ன பதில் சொல்ற” என்று ஒருமையில் கேள்வி. பதிலாக ஆங்காரமும், ஓங்காரமும் கலந்த வெளிப்பாடு. அதை எப்படியோ பொருள் உணர்ந்து கொண்டு அடுத்த கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்வது ஆவி தானா என்ற சந்தேகம் நமக்கு. சந்தேகத்தை நிவர்த்திப்பதற்காக நாய் ஒன்று ஓவராகக் குரைக்கிறது.
ஆவி உலக விவகாரங்கள் நம்மை விட மற்ற மிருகங்களுக்கு அத்துபடி என்று எங்கோ படித்திருக்கிறேன். பஜனை மடத்தை அடுத்து ஸ்ரீ ராம்தேவ் போஜனாலயா. ரொம்பவும் அதிசயமான விஷயம், சங்கத் தமிழ் வளர்த்த மீனாட்சியின் மதுரையில் இந்த போஜனாலயாவில் வேலை செய்பவர்கள் யாருக்கும் தமிழ் தெரியவில்லை என்பது. ஐஸ் வாட்டர் வேண்டாம் என்று சொன்னால் வேலை மெனக்கெட்டு ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் வைக்கிறான். இது இல்லை என்று தலையை பலமாக ஆட்டுகிறேன். பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு, நம்மைப் பார்த்து புன்னகைக்கிறான். தப்பாகப் பேசினாலும், பாஷை அவசியம் என்பதை உணர்ந்து ‘கரம் பாணி நஹி’ என்று அலறுகிறேன். ஏகப்பட்ட அலறல்களுக்குப் பிறகு, தண்ணீர் வந்து சேருகிறது. “ஆர்டினரி வாட்டர்” என அறிவிக்கிறான் அவன்.
கைவசம் நேரம் இருப்பதால், அங்கேயே டிவி பார்க்கிறேன். ஜீ டிவியில் சத்ருகன் சின்ஹா யாரோ ஒரு குண்டனோடு மோதுகிறார். சண்டைக்காட்சிகளைப் புரிந்து கொள்ள ஹிந்தி அவசியமில்லை. இருந்தாலும் ஏற்கனவே இருந்த சந்தேகம் பெரிதாகிவிட்டது. ஏன் சினிமாவில் வரும் சண்டைக்காட்சிகளில், கோட் சூட் போட்டுக்கொண்டு சண்டையிடுகிறார்கள் என்பதுதான் என் சந்தேகம்.
மறுநாள் ஆரிய பவனில் அடைக்கலம். ஏ பி/ நைட் என்று சொல்வதுதான் மதுரை வழக்கு. இரவு இரண்டு மணி வரை திறந்திருக்கும் என்கிறார்கள். இந்த ஆரிய பவன் குறித்தும் ஓர் ஐயப்பாடு உண்டு. எந்த ஊரிலும் இல்லாத விசேஷமாக இங்கே பெண்களின் ஆட்சி கல்லாப்பெட்டி, ஆர்டர் எடுத்தல் போன்ற முக்கியப் பணிகளை பெண்கள் செய்கிறார்கள் சப்ளை செய்தல், பிளேட் எடுத்தல் போன்ற கடைநிலை வேலைக்கு மட்டும் ஆண்கள். ஆரிய பவன் அருகே பானையில் கம்பங்கூழ், கேப்பங்கூழ், பசுமோர் என்று வரிசையாக மூன்று ரூபாய்க்கு விற்கப்படும். இப்போது வேண்டாம் சுப்பு என்று அதட்டல் போட்டு அடக்கி விடுகிறேன்.
இத்தனைக்கும் அப்பால் கணேஷ் மெஸ். இந்த ரெண்டு வார காலத்தில் தினமணி ஆபீஸில் அன்பர்கள் என்னிடத்தில் அதிகமாகக் கேட்ட கேள்வி, ‘கணேஷ் மெஸ் டோக்கன்’ வாங்கிட்டீங்களா என. அத்தனை பெரிய சிபாரிசு. கணேஷ் மெஸ் போனேன். வீட்டுச் சாப்பாடு போல இருக்கும் என்று சொன்னார்கள். நம் வீட்டில் செய்வதைப் போல ஏதோ தக்காளிக்காய் கூட்டாய் விடாப்பிடியாய் பரிமாறுகிறார்கள். அளவும் அப்படித்தான். நாம் சாப்பிடுகிறோமோ, இல்லையோ மடியில் கொட்டிக் கொள்கிறோமோ என்பதைப் பற்றி கவலைப்படாமல் அராஜகமான அன்பு. வீட்டு மனுஷாளைப் போலவே சட்டையில் பட்டன் இருக்கிறது என்பதை அறியாத சர்வர். அதன் விளைவை விவரிக்க முடியாது.
இதையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் அப்பு, மதுரையும் மீனாட்சியும் நல்லாத் தானே இருக்கு..
பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்தபோது, ஒரு கல்யாணத்துக்குப் போனார். அந்தக் கூட்டத்தில் பாரதிதாசன் இருந்தார். இருவரும் முன்னர் சந்தித்ததில்லை. ஆனால் பாரதி பாடல்களைப் பாடுவதை பாரதிதாசன் வழக்கமாக வைத்திருந்தார். கூட்டத்தில் யாரோ ஒருவர், இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். வீட்டுக்கு வரும்படி பாரதிதாசனை அழைத்தார் பாரதியார்.
“நாளை இரவு வருகிறேன்” என்றார் பாரதிதாசன். போலீசாருக்குத் தெரியாமல் சுதேசிகள் இரவில் சந்திப்பது வழக்கம். ஆனால் பாரதியின் முகமோ இந்த பதிலைக் கேட்டு சிவந்து விட்டது. ‘ராத்திரியில் வருவதற்கு நான் என்ன’…
நிலைமை சரியாக கொஞ்சம் நேரம் ஆனது. மறுநாள் பகல் வேளையில் பாரதிதாசன், பாரதியார் வீட்டிற்குப் போனார். பாரதியார் மாடியில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. பாரதியார் கண்ணை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். பாரதிதாசன் அருகே அமர்ந்த போது, பாரதியாரின் கவிதைகள் எழுதிய நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தார். அதைக் கையில் எடுத்தார். அப்போது அவருக்குள் ஏற்பட்ட ரசவாதத்தை மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார்
“எடுத்தேன் பிரித்தேன் செயலிழந்தேன்”
நமக்கும் அதே நிலைமைதான். எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடைய படைப்புகளை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் சூடிய பூ சூடற்க/ நாஞ்சில்நாடன்/ தமிழினி தொகுப்பை கையில் எடுத்தேன். வழக்கமாக முன்னுரையிலிருந்து படிப்பது தான் என்னுடைய இயல்பு. ஆனால் இந்த முறை நேராக தன்ராம் சிங்கை பார்க்கப் போய்விட்டேன். பெரிய கதை என்று சொல்ல முடியாது. சுருக்கமாகவும் இல்லை. நமக்கு பழக்கமான பூகோள பகுதியும் இல்லை. ஆனால் நேற்று படித்த கதை, மனதை விட்டு இன்றும் நகரவில்லை.
முன்னுரையில் அவரே கேட்டுக் கொண்டது போல கதை, கட்டுரை என்ற எல்லைக்கோட்டை அழித்து விட்டதாக ஒப்புக்கொள்கிறார். ஆனால் கதை நடுவே அங்கங்கே கட்டுரை வருகிறது. குறையாகச் சொல்லவில்லை. குழந்தைக்குப் பொட்டு வைக்கிறோம் அல்லவா அதுபோல.
மூன்று மணிநேர சினிமாவை பார்த்து விட்டு, கருத்துச் சொல்ல தெரியாமல் உச்சு கொட்டுபவர்கள் ஒரு ரகம். வாசல் திண்ணையை விட்டு இறங்காமல், பன்னாட்டு பொருளாதாரம் பற்றி பேசுபவர் மற்றொரு ரகம். இவற்றுக்கிடையே தனியாக நிற்கிறார் நம்மவர். அனுபவம் தான் ஆரம்பப் புள்ளி என்று வைத்துக்கொண்டு படித்தால், வட்டார வழகுகில், சொல் மூலம் சடங்குகள் என்ற ஏகப்பட்டவை இருக்கின்றன.
அள்ளிக் குடிப்பீர்களோ, அணைபோட்டு பாய்ச்சுவீர்களோ அவரவர் சௌகர்யம்.
சுற்றத்தையும், சூழ்நிலையையும் தொடர்ந்து அவதானிக்கும் நாஞ்சில் நாடன் அதை கதையாய் வடிக்கும்போது புதிய விசைப் புறப்படுகிறது. சமூகப் பொறுப்பு வெளிப்படுகிறது. மனிதரின் உயர்வையும், கீழ்மையையும், திசையையும் எழுத்தில் கொண்டுவருபவர் இவர். தொடர்ந்து படிப்பவருக்கு அது போகப் போகப் புலப்படும்.
நாஞ்சில் நாடன் எழுதுகிறார், சமூகம் என்னும் பாற்கடலில் சுரந்து இருக்கும் பரந்து இருக்கும் மிச்ச நஞ்சைத்தான் கலைஞன் அவனவன் பலத்திற்கும், பொறுமைக்கும் தக்க இணைத்துக் கொண்டு இருக்கிறான். அது மனித குலத்தை நஞ்சிலிருந்து காக்கும், மீட்கும் முயற்சி.
‘ஈண்டு முயலப்படும்’ என்னும் சிறுகதை லைன் வீடுகளைப் பற்றிய விவரங்கள் என்று தொடங்கி, நகர்ப்புறத்து அன்றாட வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், கேள்வி அவர் கேட்கவில்லை. படித்து முடித்தவுடன் நாம் தான் கேட்கிறோம்.
தன்ராம் சிங் என்பது ஆனந்த விகடனில் ஆகஸ்ட் 2007ல் வெளிவந்த கதை. கூர்க்காக்கள் யார் என்பதை துவக்கத்தில் சொல்லி விடுகிறார். மெதுவாகக் போய் கொண்டிருக்கும் கதை, தன்ராம் சிங் என்ற கூர்க்காவிடம் மையம் கொள்கிறது. கோவைக்குக் குடிபெயர்ந்த பிறகு, தன்ராம் சிங் கோடு தொடர்பு விட்டுப் போய்விட்டது என்கிறார் நாஞ்சில் நாடன். நம்மால் அப்படி உறுதியாக சொல்ல முடியவில்லை.
தொடரும்…