சிறுபான்மையின மக்களின் சொா்க்கமாக இந்தியா உள்ளது – முக்தாா் அப்பாஸ் நக்வி

சிறுபான்மையின மக்களின் சொர்க்கமாக இந்தியா இருக்கும் வேளையில், சிறுபான்மையினர்களின் நரகமாக பாகிஸ்தான் உள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனத்தின் 25-ஆவது ஆண்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,  ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மற்ற உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி மாற்றி வருகிறார். நம் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, அடிப்படை உள்கட்டமைப்பு வசதி என அனைத்தும் சிறுபான்மையின மக்களுக்கு எளிதில் கிடைக்கிறது. சமுதாயத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு உடனடியாக உதவி செய்கிறது.

 பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்காக தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனத்தின் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 3,000 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8.3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

 சிறுபான்மையினரின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக சிறுபான்மையின நலத் துறை அமைச்சகம் அயராது பணியாற்றி வருகிறது. மதரஸாவில் கற்று தரும் பாடத்திட்டங்களை, பள்ளி பாடத்திட்டங்களோடு இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமணம், பார்சி, பெளத்தம், கிறிஸ்தவம், சீக்கியம், முஸ்லிம் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த 3. 18 கோடி மாணவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 60 சதவீத மாணவிகள் பயனடைகின்றனர்.

 அடுத்த 5 ஆண்டுகளில், உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா சொர்க்கமாக இருக்கிறது. அதேவேளையில், பாகிஸ்தான், சிறுபான்மையினர்களின் நரகமாக உள்ளது என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.