சர்வம் சக்தி மயம்

சத்தியேந்திர நாத் போஸ் ஜனவரி 1, 1894ல்    பிறந்து இயற்பியல் துறையில் பல சாதனை  சிகரங்களைத் தொட்ட பாரதிய விஞ்ஞானி. இவர் கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். எம். எஸ்.சி படித்து விட்டு 1916ல் ‘அறிவியல் பல்கலைக் கல்லூரி’யில் ஆசிரியராக பணியாற்றுகையில், நவீன இயற்பியலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புரட்சிகரமான புதிய தத்துவங்களை அறிவதிலும், கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்தினார். ஆல்பர்ட்  ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவக் கட்டுரையை அறிவதற்காகவே ஜெர்மன் மொழியைக் கற்று, அக்கட்டுரையை உலகிலேயே  முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்ற பெருமையை அடைந்தார், சத்யேந்திரநாத்.
1924ல், டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் ரீடராக செயலாற்றிக் கொண்டிருக்கையில், குவாண்டம் பொறிமுறையில் மாக்ஸ் பிளாங்கின் அணுகுமுறையைவிட மேம்பட்ட மாற்று விளக்கத்தை அளித்தார். எடை-சக்தி சமன்பாட்டுக்கு இவருடைய கருத்தால் புதிய விளக்கம் கிடைத்தது.  அதற்காக, ஐன்ஸ்டீனால் வெகுவாக பாராட்டப் பட்டார்.
அணுத்துகள்களை இணைத்துப் பிடித்து அவற்றுக்கு எடையை தருவது கண்ணுக்கு புலப்படாத வேறு வகை சக்தித் துகள்களே என்று முதன் முதலில் விளக்கம் அளித்தார். சக்தி மண்டலத்தை உருவாக்கும் அந்த பொருளுக்கு “போஸ்” அவர்களுடைய பெயரையே சூட்டினார் ஐன்ஸ்டைன். இதுவே “போஸான்”  (Watt,Ohm, Newton போல ) என்று அழைக்கப்படுகிறது. எனவே இன்று பேசப் பட்டு வரும் ‘ கடவுளின் துகள் ‘ என்ற கருத்துக்கு தந்தை இவரே.