சரியான சந்தர்ப்பம்

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவனது வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகம். வீட்டுப் பூனையால் அந்த முரட்டு எலியைப் பிடிக்க முடியவில்லை. அந்த பூனையையே எலி தாக்கிக் காயப்படுத்தியது. சாமுராய் வேறு இரண்டு பூனைகளை கொண்டுவந்து எலியைப் பிடிக்க முயற்சித்தான். அந்த முரட்டு எலி அவற்றையும் காயப்படுத்தியது. முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்ல முடிவெடுத்து துரத்தினான். எலி அவனிடம் இருந்து தப்பி ஒருபொந்துக்குள் ஒளிந்து கொண்டது. வேறொரு வழியாக வெளியே வந்து அவனையும் தாக்கி காயப்படுத்தியது.

ஒரு எலியை பிடிக்கமுடியாத நாமெல்லாம் ஒரு சாமுராயா? என அவமானம் அடைந்தான். அவனது வேதனையை அறிந்த நண்பன், அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது. அது அந்த எலியை பிடித்துவிடும் என சொன்னான். சாமுராயும் கிழட்டுப் பூனையிடம் உதவி கேட்டான். பூனையும் உதவுவதாக ஒப்புக் கொண்டு அவனது வீட்டில் தங்கியது.

பூனை இருப்பதை அறிந்த எலி, தயங்கியபடியே வெளியே வந்தது. பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை. எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடித் திருடித் தின்றது. மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சித்தன. ஆனால், இந்தக் கிழட்டுப் பூனையோ அசையவே மறுக்கிறதே என சாமுராய் எரிச்சல் அடைந்தான். ஒருநாள் முழுவதும் பூனை அப்படியே இருந்தது. மறுநாள் வழக்கம் போல எலி வெளியே வந்து இனிப்புகளை தின்றது. அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை அந்த எலியை கடித்துக் கொன்றது.

சாமுராயும் மற்றப் பூனைகளும் அதை எதிர்பார்க்கவேயில்லை. முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி வீழ்த்தியது என வியப்படைந்தனர். அதன் சூட்சுமம் என்ன? என கேட்டனர்.

“ஒரு சூட்சுமமும் இல்லை. நான் பொறுமையாக காத்திருந்தேன். நாம் செய்யப்போவதை எலி நன்றாக அறிந்திருந்தது. ஆகவே தன்னைத் தற்காத்துக் கொள்ள பழகியிருந்தது. நான் பொறுமையாக இருந்தபோது அது என்னைச் செயலற்றவனாகக் கருதியது. ஆயுதத்தை விட வலிமையானது நிதானம். எதிரி நாம் செய்யப்போவதை ஊகித்துவிட்டால் அது நமது பலவீனம். வலிமையானவன் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பான். கூச்சலிடுபவர்கள், கோபம் கொள்பவர்கள், அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டுகிறார்கள். பலவான் தனது பேச்சிலும், செயலிலும், அமைதியாகவே இருப்பான். உலகம் அவனை பரிகசிக்கலாம். ஆனால், தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்” என்றது கிழட்டு பூனை.