சமஸ்கிருதத்தை சரணடைந்த செம்மொழியாளர்கள்

அதிமுக விலிருந்த தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை (கட்சியை) தொடங்கினார். உடனே திராவிடப் பாரம்பரியக் கட்சியினர் தினகரன், பெரியாரையும், அண்ணாவையும் புறக்கணித்துவிட்டார். இருவர் பெயரையும் வேண்டுமென்றே விலக்கிவிட்டார். அவரின் கட்சிப் பெயரில் திராவிடம் என்ற சொல் இல்லை. திராவிடப் பாரம்பரியத்தில் இருந்து வேறு பாதையில் செல்கிறார்” என்று சொல்லுக்குச் சொல் திராவிடம், திராவிடர் என்று முழங்கினர்.

தினகரனின் புதிய அமைப்புப் பற்றி நான் எழுதவில்லை. பொதுவாகவே, நம் மாநிலக் கட்சிப் பெயர்களில் திராவிடம் என்ற சொல் இல்லாமல் இல்லை. ஏன் இப்படி? இந்த நிலையில்தான் இந்த துக்கடாவிற்குத் திராவிடம்” பற்றிய தேடல் ஆர்வம் தோன்றியது.

1949 செப்டம்பர் 17 ல் அண்ணாதுரை அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் நான்கு மாநிலங்களையும் வட இந்தியாவிலிருந்து பிரித்து, திராவிட நாடு” என்னும் தனிநாட்டை உருவாக்குவது இவரின் கொள்கை. ஆனால் மற்ற மூன்று மாநிலத்தவரும் இப்பிரிவினை தேவையற்றது என்று புறக்கணித்து விட்டனர். இப்படி இருக்கத் திராவிடநாடு எப்படி சாத்தியமாகும்?

1963ல் இந்திய அரசு பிரிவினைத் தடைச்சட்டத்தைக் கொண்டுவந்தது. வேறு வழியின்றி அண்ணாதுரை திராவிடநாடு” கொள்கையைக் கைகழுவினார். பின் இந்திய அரசுக்கு உட்பட்ட அதிக அதிகாரம் கொண்ட மாநில ஆட்சி” எனத் தன்கொள்கையைத் தளர்த்திக் கொண்டார். ஆனால் கட்சிப் பெயரில் உள்ள திராவிடத்தை எடுக்கவில்லை.

இனி, திராவிடம் என்பதற்குத் தமிழ் என்ற சுருங்கிய பொருள் கூறுவரோ? தமிழ் என்னும் அழகிய இனிய சொல்லிருக்கத் திராவிடம் என்ற வடமொழிச் சொல்லைத் தம் கட்சிப் பெயரில் வைத்திருப்பது செம்மொழியாளர்களுக்கு அருவெறுப்பாகத் தெரியவில்லையோ? தமிழே உயிர் என்பவர்கள் தமிழ்சொல்லைக் காற்றில் பறக்கவிடலாமா?