சபாஷ்! மகத்தான தீர்ப்பு!

மிழகக் கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16ம் தேதி அளித்த தீர்ப்பு மகத்தானது. தனது தீர்ப்பில் ஆகம விதிகளின்படி மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு, நடைமுறை எங்கெல்லாம் ஏற்கனவே நடப்பில் இருக்கிறதோ அந்த நடைமுறையும் மரபும் தொடரலாம். இது இந்திய அரசியல் சாஸனம் வலியுறுத்தும் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அடிப்படை தத்துவத்திற்கு முரணானது அல்ல என்று நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னவர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறும்போது இவர்களுக்கு கோயில்களின் நடைமுறைகளில் தலையிடுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. யார் அர்ச்சகராகலாம், எந்த மொழியில் அர்ச்சனை செய்யலாம் என்பது பற்றியெல்லாம் முடிவெடுப்பதற்கு மதச் சார்பற்ற அரசுக்கு உரிமை கிடையாது.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு உரிமையுள்ள மெக்கா, மதீனாவில் இந்திய இஸ்லாமியர் மதகுரு ஆக முடியாது. ஷியா மசூதிகளில் சன்னிகளுக்கு இடமில்லை. கத்தோலிக்க சர்ச்சுகளில் மற்ற சபையினருக்கு இடமில்லை. பல சர்ச்சுகளில் தலித்துகள் பாதிரி ஆக முடியாது. முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு உரிமைகளில் தலையிட முடியாத அரசுக்கு ஹிந்து கோயில் வழிபாட்டு உரிமைகளில் தலையிட உரிமை கிடையாது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ஏராளமான கோயில்களில் அனைத்து ஜாதியினரும் பூஜாரிகளாக இருக்கின்றனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த பூஜாரிகளுக்கும் அர்ச்சகருக்கான பயிற்சி அளித்து, விரும்புவோருக்கு பூணூலும் அணிவிக்கிறது. ஆகம விதிகளும் மரபுகளும் இல்லாத ஏராளமான கோயில்களில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவராயினும் பூஜை செய்யலாம் என்பதை ஹிந்து இயக்கங்கள் ஆதரிக்கின்றன.

கோயில்களில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் எனில் ஆன்மிகச் சான்றோர்களும் ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் பக்தர்களும் கலந்து முடிவு எடுக்கலாம். இதில் அரசுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. அரசு அதிகாரிகள் மூலம் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளலாமே தவிர வழிபாட்டு நியமங்களில் தலையிட உரிமையில்லை. எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஒரு சபாஷ் போடலாம்.