சபரிமலை கோயில் வழக்கும் – உச்சநீதிமன்ற தீர்ப்பும்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய 2018 செப்டம்பர் மாதம் 28ந் தேதி உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.  மேற்படி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி ரிட் மனு உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  2019 பிப்ரவரி மாதம் விசாரனை முடிந்த பின்னர், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.   14.11.2019ந் தேதி உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது.  வழக்கின் சாரம்சத்தை ஒட்டி, ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்திரவிட்டது.  இந்த உத்திரவிற்கு இரண்டு நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.  தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐவர் அளித்த தீர்ப்பில் பல அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

          பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது.  இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்கள கவனத்தில் கொண்டோம்.  எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்கிறோம்.   இந்த தீர்ப்பு எதிர்பார்க்காத தீர்ப்பு என்பதாகவே கருத வேண்டியுள்ளது.  ஐந்து நீதிபதிகளில் இருவர் ஏழு நீதிபதிகளின் விசாரனைக்கு ஆதரவு கொடுக்கவில்லை.   தலைமை நீதிபதி , பெண்கள் செல்ல கட்டுபாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல , வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது.  மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு, பார்சி இன பெண்கள், பார்ஸி இனத்தைச்சாராத ஆடவரை திருமணம் செய்து கொண்டால், அந்த மதத்துக்கான வழிபாட்டுத் தலங்களில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது பு , தாவூதி போரா முஸ்லீம் சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சபரிமலை விவகாரத்தை போன்றமையாகும், எனவே சபரிமலை தீர்ப்பை இந்து மதத்திற்குட்பட்டதாக கருதக் கூடாது, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்வு காணும் வரை சீராய்வு மனுக்களும் நிலுவையில் இருக்கும்  என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

          இஸ்லாமியர்களும், பார்சிகள் தொடர்பான மனுக்கள் எதுவும் இந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை.  அதனால் அதைபற்றி இங்கு பேச கூடாது என நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டதும் தவறானது, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் மற்ற மதத்தில் உள்ள கட்டுப்பாடுகளையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.  கேரள அரசு எல்லா மக்களையும் ஒன்றாக நடத்துகிறது.  பெண்களுக்கும் சம உரிமைவழங்க நினைக்கிறது அதை நாம் மதிக்க வேண்டும் என நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.  இதில் பல கேள்விகளுக்கு இ்டமளிக்கிறது.  ஒன்று சபரிமலை கோவிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தவர் ஒரு இஸ்லாமியர்.  இளம் வழக்கறிஞர் அமைப்பின் தலைவர் நவ்ஷத் அகமது கான் என்பவர் பொது நல வழக்கு தொடுத்தார்.  இந்த வழக்கில் தான் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு 2018-ல் தீர்ப்பு வழங்கியது.  கேரள அரசாங்கம் கடவுள் நம்பிக்கையற்ற அரசாகும்.  உச்ச நீதிமன்ற தீர்பபை அமுல்படுத்த அவசரம் காட்டுவது சபரிமலைக்கு மட்டுமே என்பதையும் கவனிக்க வேண்டும்.

          நீதிபதி சந்திரசூட் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் சில கேள்விகள் எழுகின்றன. அகில இந்திய ஹிந்து மகா சபையின் கேரள தலைவர் தேத்தாத்ரேய சாய் ஸ்வரூப் நாத் , எவ்வாறு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அதே போல் இஸ்லாமிய பெண்களை மசூதிக்குள் அனுமதி உத்திரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.   பாதிக்கப்பட்டநபராக இல்லை.  அவரது உரிமைகள் பாதிக்கப்பட்டதாக இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.  மாறாக சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்த இளம் வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் தாக்கல் செய்த மனுவின் மீது மட்டும் எவ்வாறு விசாரனை நடத்தி தீர்ப்பு கொடுக்கலாம் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.  அதே நேரத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, கேரள இந்து பெண்கள் போராட்டங்களை கூட நடத்தவில்லை அல்லது அரசிடம் கோரிக்கையும் வைக்க வில்லை.

          கேரள அரசாங்கம், பெண்களுக்கு சம உரிமை வழங்க நினைக்கிறது என்ற நீதிபதியின் கருத்தும் தவறானது.   கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம், 2017 ஜீலையில் சிரியன் சர்ச்சுக்கும், மல்னரா ஆர்தோடக்ஸ் சர்ச்சுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்கியும், அதை அமுல் படுத்த முடியாமல், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை அமுல் படுத்த கால அவகசாம் கேட்டு, பிரமாண வாக்குமூலம்  தாக்கல் செய்தது என்பதையும் மறந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.    2019 பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியடைந்தவுடன்,  சபரி மலை விவாரத்தில் தவறான முடிவு எடுக்கப்பட்டதின் விளைவு தோல்வி என தெரிவித்தது.

          இறுதியாக, அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிபாட்டு சுதந்திரம் (பிரிவு 25) வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் ( பிரிவு 26) ஆகியவை குறித்த தெளிவான விளக்கம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை சாராம்சங்களப் பின்பற்றுவது தொடர்பான விளக்கம் , அரசமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவில் குறிப்பிட்டுள்ள ஹிந்துக்களின் உள்பிரிவுகள் என்பதற்கான விளக்கம் ஆகியவற்றை ஏழு நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு வழங்க வேண்டும்.  மதம் தொடர்பான சடங்குகளில் எந்த எல்லை வரை நீதித் துறை தலையிடலாம் குறிப்பிட்ட மதத்தில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் குறித்து அந்த மதத்தைச் சாராதவர் தாக்கல் செய்யும் பொதுநல மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா முக்கிய மத சடங்குகளுக்கு அரசமைப்பச் சட்டத்தின் 26-வது பிரிவின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட கேள்விகளுக்கு புதிய அமர்வு தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கியமானதாகும்.  ஏன் என்றால் மதசார்பற்ற தன்மை என்பதை பயன்படுத்தி, சில அரசியல் கட்சிகள் செய்யும் அடாவடித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க உதவும்.

          ஆர்.டி.ஐ. வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் –  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், ஆர்.டி.ஐ. சட்ட வரம்புக்கு உட்பட்டதே என்று தில்லி உயர்  நீதி மன்றம் 2010-ல் கொடுத்த தீர்ப்பை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லி உயர் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.   ஆனால் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பில்,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஒரு பொது அமைப்பு என குறிப்பிட்டுள்ளது வரவேற்புக்குறியது.  ஆர்டிஐ சட்டத்தை கண்காணிப்புக்கான ஆயுதமாக பயன்படுத்தப்பட கூடாது என்றும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் அதே நேரத்தில், நீதித் துறையின் சுதந்திரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.  நீதித் துறையின் சுதந்திரம் என்ன என்பதைப்பற்றிய முழு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை, இது வெளிப்படையான தன்மையை உறுதி படுத்த இயலாது.   ஏன் என்றால் தீர்ப்பில், ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்கும் போது, வெளிப்படைத தன்மையையும், ரகசியம் காக்கும் உரிமையையும் உச்சநீதிமன்ற தலைமை அலுவலகம் சமநிலையில் கையாள வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நம்பக்கதன்மையை கேள்வி குறியாக்கும் மற்றொரு வாசகம், கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நீதிபதிகளின் பெயர் விவரங்களை மட்டுமே ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வெளியிட முடியும்.  நியமனங்களுக்கான காரணங்கள் வெளியிடப்பட மாட்டாது  என்பதாகும்.

          நீதிபதிகளில் டி.ஒய். சந்திரசூட் தனது தீர்ப்பில், ஆர்டிஐ சட்டத்தில் ஆக்கப்பூர்வமான அம்சங்கள் இருப்பது போல், எதிர்மறையான அம்சங்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  எதிர்மறையான அம்சங்கள் எவை என்பது பின்னர் பெரிய விவாதமாக மாறி ஆர்டிஐ சட்டம் நீர்த்து போக வாய்பிருக்கிறது.   பாராட்டப்பட வேண்டிய ஒரு அம்சம்,  நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு நீதிபதிக்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமை அல்ல, அது அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு என குறிப்பிட்டது.

          ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த குட்டு –  ரஃபேல் போர் விமானம் பற்றிய தீர்ப்பிற்கும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதன் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.  மறு சீராய்வு மனுக்கள் எந்த தகுதியும் இல்லாமல் இருப்பதை நாங்கள் காண்கிறோம்.  குற்றச்சாட்டுகள் குறித்து விசாரனைக்கு உத்திரவிடுவது பொருத்தமானதல்ல என குறிப்பிட்டுள்ளார்கள்.  நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருக்கும் போது, நீங்கள் அதை ஒரு நெடுஞ்சாலை அல்லது அணை கட்டுவதற்கான ஒப்பந்தமாக பார்க்கவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளது மிகவும் முக்கியமான வாசகமாகும்.   There was no occasion to doubt the decision – making process in the procurement of 36 Rafle fight jets.  என்றும்,   நீதிபதி திரு. கௌல்,   Justic Kaul said that the Judges had reached the conclusion that it is not appropriate to order a roving enquires into the allegations   என்றும் கூறப்பட்டுள்ளது

          ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதராமும் இல்லை என மற்ற இரு நீதிபதிகளும் தெரிவித்த கருத்தில் தானும் ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளார்.  ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததற்கான உறுதியான ஆதராங்கள் இருந்தால் சி.பி.ஐ. விசாரனை நடத்தலாம் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.  இந்த கருத்தை தெரிவித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தனியான தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.  ஆனாலும் ஒரு கருத்தை வலியுறுத்தியுள்ளார்.  அதாவது ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எம்.ஐ.ஆர். பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் எந்த முகாந்திரமும் இல்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

          ரஃபேல் போர் விமானம் வாங்கியது சம்பந்தமாக அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு, வெளியே நிருபர்களிடம் பேசிய போது, காவலாளி என கூறிக் கொள்பவர், திருடன் என நீதிமன்றமே  கூறி விட்டது என உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை வேண்டுமென்று திரித்து, அதற்கு அரசியல் சாயம் பூசி தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்க பயன்படுத்திக் கொண்டார்.   தீர்ப்பின் சாரம்சம் தெரியாமல் பேசி விட்டேன் என பிரமாண வாக்குமூலம் அளித்து விட்டேன் என்றார்.  ஆனாலும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா, நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர், ராகுல் காந்தி இனிவரும் காலங்களில் மிகுந்த கவனத்துடன் நீதிமன்றங்களின் விஷயங்களை குறித்துப் பேச வேண்டும் என எச்சரிக்கை செய்கிறோம் என தீர்பபளிக்கப்பட்டது.  இது ராகுல் காந்தியின் கண்ணிய குறைவான நிகழ்வாகும்.

          கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கு –  தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  “நதிநீர் சட்ட விதிகளை மீறி பெண்ணையாற்றில் கர்நாடக அரசு அணைக் கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் பெண்ணையாற்றை கர்நாடகா சொந்தம் கொண்டாடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதால் அவர்களது செயல்பாடு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அதனால் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தடை விதிப்பதை தவிர வேறு வழியே கிடையாது’’ என்பது தமிழக அரசின் வாதமாகும்.

         தமிழகத்தின் வாதம், தமிழகத்திலும் தென் பெண்ணை ஆறு ஓடுவதால், கர்நாடக அரசு முழு உரிமையும் கோர முடியாது என்பதாகும்.  தமிழகத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளது.  எவ்வாறு காவிரி நதி நீர் ஒப்பந்தம் கலாவதியாகியும் கூட, அதை புதுபிக்க தி.மு.க. அரசும், அ.இ.அ.தி.மு.க. அரசும் தவறி விட்டு, பின்னர் கதறியதோ, அதே போல், 1892-ம் ஆண்டு நீர்ப்பங்கீடு ஒப்பந்த அடிப்படையில், கீழ்ப் பகுதி மாநிலங்களின் அனுமதி பெறாமல் ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது  என்பதை நாடு விடுதலை பெற்ற பின்னரும் புதுபிக்க முயலவில்லை.   உரிய சட்ட விதிகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இதைத்தவிர பெண்ணையாற்று விவகாரத்தில் பிரச்னையை தீர்க்க தீர்ப்பாயம் அமைப்பது போன்ற எந்த ஒரு கோரிக்கையையும் மத்திய அரசிடம் தமிழக அரசு  கோரிக்கையாக வைக்கவில்லை. அதனை வேண்டுமென்றே தவிர்த்ததுபோல் நீதிமன்றம் கருதுகிறது. மேலும் அணைக் கட்டும் பணிகளை கிட்டத்தட்ட கர்நாடக அரசு முடித்துவிட்டதாக சொல்லப்படக்கூடிய நிலையில் நீதிமன்றத்தால் இந்த தருணத்தில் வேறு எதுவும் செய்ய இயலாது. மேலும், தென்பெண்ணை ஆற்றில் தேவையான கோரிக்கைகளை 4 வாரத்தில் மத்திய அரசிடம் அளிக்க தமிழக அரசை அறிவுறுத்துகிறோம். இந்த காரணங்களால் அணைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனுவை விசாரிக்க இயலாது என்பதை சுட்டிக்காட்டி  அவர்களது தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவித்துள்ளார்கள்.

      இவ்வாறு பிரச்சினைகள் வரும் தெரிந்து தான், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, மத்திய அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு தலைமையில் நதிகள் இணைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டது. கேரளா , தமிழகம், போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.  மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முனையவில்லை.  கூட்டணியிலிருந்த தி.மு.க. ஆதாயத்தை எதிர்ப்பார்த்து துறைகள் கேட்டார்களே தவிர, தமிழக நலனை பற்றிய அக்கரையில்லாமல் இருந்தார்கள்.   மாநில சுயாட்சி என்ற கோஷத்தை முன் வைத்து பிரிவினை பேசிய திராவிட கட்சிகள் மாநிலத்தின் நலனை பற்றிக் கவலைப்படாமலும், கண்டு கொள்ளாமலும் இருந்ததின் காரணமாகவே தமிழகம் நதி நீருக்கு அண்டைய மாநிலங்களை கையேந்தும் நிலைக்கு வந்து விட்டது.