சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதியில்லை. இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
சபரிமலை விவகாரம் மட்டுமின்றி, மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களை திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது குறித்தும் புதிய அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.
இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு முன்பு சபரிமலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.