கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அமர்வு, இந்த விவகாரத்தை 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி உத்தரவிட்டது.
சபரிமலை வழக்குடன், மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது பற்றியும், பிற மதங்களைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை வழிபாட்டு தலங்களில் அனுமதிப்பது குறித்தும், தாவூதி போரா இன பெண்கள் தொடர்பான சில பிரச்சினைகளையும் இந்த அமர்வு விசாரிக்கும் என்று அந்த உத்தரவில் கோர்ட்டு கூறி இருந்தது.
விசாரணை
அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சாந்தான கவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூரிய காந்த் ஆகிய 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 3-ந் இந்த வழக்கு விசாரணையை தொடங்கியது.
அப்போது, பாலி நாரிமன் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் வாதாடுகையில், சபரிமலை வழக்கு தொடர்பான மறுஆய்வு மனுக்களை முன்பு விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, மத விவகாரங்களில் கோர்ட்டு எந்த அளவுக்கு தலையிட முடியும் என்பது உள்ளிட்ட 7 புதிய கேள்விகளை எழுப்பி இருப்பதாகவும், ஆனால் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மறுஆய்வு மனுக்களை மட்டுமே விசாரிக்க முடியும் என்றும், கேள்விகள் குறித்து விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இதைத்தொடர்ந்து, மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் போது மற்ற சட்டரீதியான கேள்விகள் குறித்து விசாரிக்க முடியுமா? என்பது பற்றி கடந்த 6-ந் தேதி விசாரணை நடத்திய நீதிபதிகள், இது தொடர்பான உத்தரவை 10-ந் தேதி பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாடு மற்றும் சுதந்திரம் குறித்து இந்த அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மத வழிபாடு சுதந்திரம்
சுப்ரீம் கோர்ட்டு மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தும் போது, சட்டரீதியான கேள்விகளை பரிசீலனைக்கு எடுப்பதற்காக வழக்கை அதிக நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியும்.
இந்த வழக்கில் (சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்) அரசியல் சட்டப்பிரிவு 25-ன் கீழ் மதரீதியான சுதந்திரத்தின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன? தனிமனிதர்களுக்கான உரிமை மற்றும் பல்வேறு மதப்பிரிவுகளுக்கான உரிமைகள் என்ன? வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு மதத்தில் கடைப்பிடிக்கும் நடைமுறைகளுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர முடியுமா? மதரீதியாக பெண்களுக்கு உள்ள சுதந்திரம் உள்ளிட்ட 7 சட்டரீதியான கேள்விகள் மீது இந்த அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும். இந்த விசாரணை வருகிற 17-ந் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.