சந்தோஷம் பொங்கென சங்கே முழங்கு

சங்கொலியை எழுப்புவதும் கேட்பதும் உடல் நலத்துக்கு உகந்தது என்பதை நவீன ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. ரிக்வேதத்திலேயே சங்கொலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சைவர்களும் வைணவர்களும் சங்கொலியை திவ்யமானதாக கருதிவந்தார்கள். சங்கநாதம் கம்பீரமானது. மருத்துவ ரீதியாகவும் சங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சங்கில் பால் புகட்டும் பழக்கம் இப்போது பல குக்கிராமங்களில் காணப்படுகிறது.

கடந்த கால விழுமியங்களை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. போற்றத்தக்க பழமையை போற்றத் தவறினால் மரபிலிருந்து நாம் படிப்படியாக விலகிவிடுவோம். இது ஆணிவேரை இழப்பதற்கு சமம்.  சென்னை ஆர்.கே. நகரில் வாழ்ந்துவரும் வழக்குரைஞர்

பி. ஜெகசுந்தரியும் அவரது கணவர் எஸ். பாலமுருகனும் சங்கு முழக்கத்துக்காக ஓர் இயக்கத்தையே நடத்தி வருகிறார்கள்.

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், மண்ணடி கந்தசாமி கோயில் போன்றவற்றில் சங்கு சேவை நிகழ்த்த இக்குழுவினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சங்கொலிப்பதால் ஏற்படுகின்ற உடல் நலம் சார்ந்த மேம்பாட்டின் அவசியத்தை எடுத்துரைப்பதில் ஜெகசுந்தரியும் பால முருகனும் முனைப்பு காட்டி வருகிறார்கள். சங்கொலிப்பது பிராணாயாமத்துக்கு நிகரானது. மியூசி தெரபியில் சங்கொலிக்கு முக்கியப் பங்குண்டு.  ஆஸ்துமா தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்க இது உதவுகிறது. சங்கொலி நாபிக்கமலத்திலிருந்து உதித்தெழுந்து உயரே வருகிறது. இதமான அதிர்வுகள் நாடி நரம்புகளை வலுப்படுத்துகின்றன.

பெரும்பாலான இசைக் கருவிகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால் சங்கு இயற்கையிலேயே உருவானது. இது இறையம்சம் பொருந்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பாரதியார் பிறந்தநாளை ஒட்டி 1081 பேர் சங்கொலி எழுப்பினார்கள். இச்சாதனைக்கு கின்னஸ் நிறுவனத்திடமிருந்து விரைவில் சான்றிதழ் கிடைக்கும் என ஜகசுந்தரியும் பால முருகனும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

வார இறுதியில் ஆர்.கே. நகரில் காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்பட்ட பிறகு மாலை 3 மணி முதல் 6 மணி வரை சங்கொலி பயிற்சி அளிக்கிறார்கள்.  இதையடுத்து பிராணாயாமம் பயிற்றுவிக்கிறார்கள். இப்பயிற்சி முற்றிலும் இலவசம். பயிற்சியாளர்களுக்கு சுமார் ரூ. 300 மதிப்புடைய சங்கும் இலவசமாகவே அளிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 600 பேர் சங்கொலி பயிற்சி பெற்றுள்ளனர்.

கோயில்களில் சங்கு சேவை கட்டாயம் இடம்பெற்றிருந்தது. இப்போது இது வெகு அபூர்வமாகவே உள்ளது. மீண்டும் இதை பரவலாக்க வேண்டும். இதன் புழக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இத்தம்பதியர் இயங்கிவருகின்றனர்.