சட்டசபையின் மாண்பைக் காப்பாற்றுங்கள் முதல்வர் அவர்களே!

தற்குறிகள், தற்குறிகள் என்று கேலி பேசினார்கள். ஆனால் அரசாங்கத்தின் சார்பில் சட்டமன்றத்தில் பேசிய ஒவ்வொரு அமைச்சரும் குறி தவறாமல் அடித்த அடியில் தறிகெட்டு ஓட்டுமெடுத்தனர் திராவிட மூட்டை முன்னாள் அமைச்சர்கள்.
இப்போதும் முதல்வர் மீண்டும் சொல்கிறார், உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் அளிப்பேன், ஆனால் நீங்கள் ஓடிப் போகக் கூடாது என்று. இப்படி ஒரு தைரியம் முதல்வருக்கு வருகிறது என்றால் ஓடிப்போனவர்களால் தானே!
ஹிந்து விரோத, தேச விரோத, ஊழல் கறை படிந்த திமுகவை, தவெக நையப்புடைக்கும் போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நல்லவேளை, இந்த அரசு வந்த பிறகு சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பில் வந்து விடுகிறது. இல்லையேல் வழக்கம் போல முரசொலியும், தினகரனும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு இருக்கும்.
இப்படி எல்லாம் நாம் சொல்வதால் தவெகவை பாராட்டுகிறோம் என்று அர்த்தம் அல்ல. சட்டமன்றம், சுவிசேஷ கூட்டமாக மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டை நாம் இங்கே வலுவாக முன்வைக்கிறோம். அது மட்டுமல்லாமல், திமுக ஆட்சிக்கு கொஞ்சமும் சளைக்காமல் தவெக உறுப்பினர்கள் முதல்வரை புகழ்வதும் பாட்டு பாடுவதும் கேலிக்குரியதாக இருக்கிறது.
நாடாளுமன்ற அவைகளில் சபாநாயகரோ துணை ஜனாதிபதியோ இல்லாத நேரத்தில், மூத்த உறுப்பினர்கள் சபையை வழிநடத்துவார்கள். அதற்கென்று ஒரு பட்டியல் உண்டு. ஆனால் இங்கு முதல் முறை எம்.எல்.ஏ.க்கள், ஒரு மகளிர், ஒரு சிறுபான்மையினர் என்று சபையை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் சட்டமன்றம் காட்சிப் பொருளாகிறது.
தொகுதியிலே இல்லாத தொழிற்சாலையை மூட வேண்டும் என ஒரு எம்.எல்.ஏ பேசுவதும், அதை மூட முடியாது என்று துறை சார்ந்த அமைச்சர் பதில் சொல்லுவதும் வரலாற்றில் இல்லாத அபத்தங்கள்.
ஆளும் கட்சி உறுப்பினர் பலருக்கு நாவில் தமிழ் வருவதில்லை. தயார் செய்து கொண்டு வந்திருக்கும் உரையை கூட, தடையில்லாமல் ஆளுங்கட்சி
எம்.எல்.ஏ.க்களால் படிக்க இயலவில்லை. இதனால் சபை மாண்பிற்கு இப்படி ஒரு இழுக்கா என்று விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.
சட்டசபையின் மாண்பைக் காப்பாற்றுங்கள் முதல்வரே, இதுதான் இப்போது நமது வேண்டுகோள்!