கோயில் கொண்டிருப்பது சாமி மட்டுமா ?

இந்தக் கட்டுரை எழுதப்படுகிற மே 26 அன்று தமிழகம் முழுவதும் கோயில் வாசலில் தோப்புக்கரணம் போட்டு பக்தர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள். என்ன பிரார்த்தனை? கொரோனா ஊரடங்கு காரணமாக அடைத்துப் போடப்பட்டிருக்கிற கோயில்களை பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை தான் பக்தர்களால் இறைவனிடம் பிரார்த்தனையாக சமர்ப்பிக்கப்பட்டது. ஹிந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். சமூக விலகலை கடைப்பிடித்து சட்டப்படி இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் பக்தர்கள். அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் அல்லவா?
தமிழகம் முழுவதும் ஹிந்துக் கோயில்கள் மூடப்பட்டிருக்கின்றன. முறைப்படி பூஜை நடப்பதற்காக அர்ச்சகர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பல கோயில்களில் இதுபோல நடக்கிறது. திருமயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலை எடுத்துக்கொள்வோம். அர்ச்சகர்களுடன் ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவரை கோயிலுக்குள் அனுமதித்து, கோயிலில் உள்ள ஒலிபெருக்கி சாதனத்தின் மூலம் அவர் தேவார திருவாசகம் ஓதி, திருவிளையாடல் புராணம், சிவ புராணம் போன்ற பக்தி இலக்கியங்களை விவரித்து, ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்த அறநிலையத் துறை ஏற்பாடு செய்யலாம் என்பது இன்னொரு கோரிக்கை. கபாலீஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுரத்தை ஒட்டி குளத்தின் மறுபுறம் நின்று கேட்டால் கூட அந்த ஆன்மீக சொற்பொழிவு தெளிவாக கேட்கும். அதாவது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்தபடியே கேட்டுப் பயன் பெறலாம் அல்லவா? மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஆடி வீதி என்றொரு பிராகாரம் உண்டு. ஆண்டு முழுதும்ஆடி வீதியில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறும். பயன்மிக்க இந்த பல நூற்றாண்டுப் பழக்கத்தை, பெரும்தொற்று பீதியால் மக்கள் மனம் கலங்கி நிற்கிற இந்த வேளையில் மறுபடியும் செயல்படுத்தினால் அது எவ்வளவு பெரிய புண்ணியம்!

** கொரோனா இல்லாத நாட்களிலேயே பக்தர்கள் அவரவர் சொந்த குடும்ப பிரச்சினைகளால் ஏற்படும் சஞ்சலத்தை நீக்கி மனநிம்மதி பெற கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவார்கள். தரிசனம் செய்துவிட்டு நிதானமாக கோயிலை வலம் வந்து அமைதியாக சற்று அமர்ந்து பகவானை தியானித்து எழுந்து புறப்படும் போது அவர்கள் மனது தெளிந்த தடாகம் போல சீராகிவிடும்.பக்தர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அன்றாடம் ஊடகங்கள் உமிழும் தகவல்களை பார்த்து கேட்டு பயந்து குழம்பி நிற்கிறார்கள். இந்தமாதிரி வேளையில் அவர்கள் சரணடையும் கோயில்களும் அடைக்கப்பட்டுவிட்டன என்றால், பாவம், அவர்கள் என்னதான் செய்வார்கள்! மன அழுத்தத்தோடு மல்லுக்கட்டும் மக்களை மனதில் கொண்டாவது அறநிலையத்துறை சில கட்டுப்பாடுகளுடன் கோயிலை வழிபாட்டுக்காக திறந்து வைக்க வேண்டும். பொதுவாகவே மக்களின் பயத்தை தணிப்பதற்காக ஆங்காங்கு மனநல ஆலோசனை அமர்வுகள் நடத்துவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் இதே நன்மையைத் தரக்கூடியது ஆலய தரிசனம். தொன்று தொட்டு ஊர் மக்களுக்கு மிக நன்றாக தெரிந்த அந்த ஆலய தரிசனம் மட்டும் கூடாது என்றால் எப்படி? திறந்து விடப்பா கோயிலை என்றுதான் பக்தர் கேட்பார்.

** கோயிலைத் திற என்று பக்தர்கள் ’ஊதுகிற சங்கை ஊதி விட்டார்கள்’. ’விடிகிறபோது நிச்சயம் விடியும்’. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மட்டும் போற்றத்தக்க ஒரு பணி நடைபெறுகிறது. அங்கே பழங்கால கலாச்சார வரலாற்று செய்திகளை சொல்கின்ற ஏராளமான கல்வெட்டுகள் உண்டு. அந்த கல்வெட்டுகளை படியெடுக்கும் வேலை நடக்கிறது என்பது நல்ல செய்தி. கோயில் நடை திறந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு முன் இந்தப்பணி எந்த அளவுக்கு முன்னேறும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள் செலுத்த வேண்டிய வாடகையை வசூலிப்பதை இரண்டு மாத காலத்திற்கு ஒத்திப்போடுமாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் குடும்பங்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். கோயில் இட வாடகை என்பது பெயருக்குத்தான் என்று சொல்பவர்கள் உண்டு. அது கூட தர முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இது நிவாரணம்.

** இங்கே நாம் பேசுவது ஹிந்து கோயில் குறித்து. ஹிந்து கோயில்களை மட்டும் நிர்வகிக்கும் ஹிந்து அறநிலையத் துறையில் வேலைக்கு சேர்பவர் “நான் ஹிந்துவாகப் பிறந்தேன். ஹிந்து சமய நெறிப்படி நடக்கிறேன்” என்று சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்பது சட்டம். இந்த சட்டத்தை செயல்படுத்த ஹிந்துக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. சத்தியப் பிரமாணம் செய் என்று நீதிமன்றம் ஆணையிட வேண்டியிருந்தது. வருகிற ஜூன் 11க்கு முன்பாக அறநிலையத் துறை அலுவலர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்துவிடவேண்டும் என்று அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். கோல் எடுத்தால்தான் குரங்கு ஆடும் போலிருக்கிறது.

** இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் ஹிந்து பக்தர்கள் சட்டத்தை மீறாமல் நடப்பதுடன் கூடவே, ஆத்மார்த்தமாக தங்கள் பக்தியை வெளிப்படுத்திய சம்பவமும் நடந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் சுவாமி புறப்பாட்டின் போது வீடுதோறும் வாசல் தெளித்து கோலம் போட்டு ஊரை அலங்கரிப்பார்கள். சென்ற வாரம் ஒருநாள் வீடுவீடாக சில தன்னார்வலர்கள் போய் கேட்டுக் கொண்டதன் பேரில், மாலை நேரத்தில் அப்பகுதி மக்கள் வீடுதோறும் வாசலில் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு அலங்கரித்தது, மாலைநேர பூஜையின் போது கோயில் மணி ஒலி சப்தம் கேட்டு, வீட்டு வாசலில் நின்றபடியே பார்த்தசாரதி பெருமாள் சன்னிதி நோக்கி ஒரே நேரத்தில் கற்பூர தீபாராதனை செய்து, “நோய் அழிந்து உலகம் பயம் தெளிந்து நல்லபடியாக வாழ” அருள்புரியும்படி பெருமாளிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்