கைதாகிறாரா ப.சிதம்பரம்? சிபிஐ அதிகாரிகள் தீவிரம் – உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்குமா?

ஐஎன்எக்ஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதையடுத்து, அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்காக நேற்றிலிருந்து இருமுறை டெல்லியில் உள்ள சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றபோதும் அங்கு அவர் இல்லை. இதையடுத்து, நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிஐபி அதிகாரிகள், 2 மணிநேரத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் நீதிபதி கவுர் நேற்று தீர்ப்பளித்தார். அதில் ” இந்த வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக ப.சிதம்பரம் இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவருகிறது. ஆதலால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது” என்று தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்த சில மணிநேரங்களில் சிபிஐ அதிகாரிகள் குழு ஜோக்பார்க் பகுதியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்துக்கு விரைந்தனர். அங்கு அவர் இல்லை எனத்தெரியவந்ததையடுத்து அவர்கள் புறப்பட்டனர். இவர்கள் வந்து சென்றதும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து ப.சிதம்பரம் குறித்து விசாரித்துச் சென்றனர். அதன்பின் நள்ளிரவில் சிபிஐ அதிகாரிகள் குழு ப.சிதம்பரம் இல்லத்துக்கு வந்தனர். இதையடுத்து, ப.சிதம்பர் வீட்டில் சிபிஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

அந்த நோட்டீஸில் ” ஐஎன்எக்ஸ் வழக்கில் சில உண்மைகளையும், சில விவரங்களையும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டியது இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி என்ற முறையில் இந்த வழக்கில் இன்னும் 2மணிநேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், அடுத்த 2 மணிநேரத்தில் ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை.தற்போது ப.சிதம்பரம் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

அதேசமயம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்நடப்பதற்கு முக்கியமான ஆதரவாக இருந்துள்ளார் என்று சிதம்பரத்தை குறிப்பிட்டுள்ளது. அதனால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த சூழலில் இன்னும் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தினால், சட்டநுணுக்கங்கள் உதவியுடன் ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கக் கூடும் என்பதால் சிபிஐ கைது செய்யதீவிரம் காட்டுகிறது.

மேலும், ஐஎன்எக்ஸ் வழக்கில் முக்கியமானவராக இருக்கும் இந்திராணி முகர்ஜி, தன்னுடைய வாக்குமூலத்தில் அரசின் தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால், ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ வலுவாக சேகரித்து வருகிறது.