கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘சீக்கியருக்கான நீதி’ அமைப்பு தொடங்கப்பட்டது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதர வான இந்த அமைப்பு இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத நடவடிக் கைகளில் ஈடுபட்டது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்த அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு அண்மையில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-ம் ஆண்டில் கேஜ்ரிவால் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்தார். அப்போது அவர் டெல்லி முதல்வராக பதவி வகிக்கவில்லை. காலிஸ்தான் குழுக்களின் தலைவர்களை நியூயார்க்கில் அவர் சந்தித்துப் பேசினார்.
டெல்லி முதல்வராக பதவியேற்ற 5 மணி நேரத்தில் காலிஸ் தான் ஆதரவாளர் தேவிந்தர் பால் புல்லரை சிறையில் இருந்து விடுதலை செய்வேன் என்று கேஜ்ரிவால் உறுதி அளித்தார். இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் காலிஸ்தான் குழுக்கள் தரப்பில் கேஜ்ரிவாலுக்கு ரூ.133.54 கோடி வழங்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான பகவந்த் மான் சிங் தற்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். நாங்கள் அளித்த பணத்தை மூலதனமாக கொண்டே பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவால், சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சிறையில் இருந்து அவர் பிறப்பித்த 2-வது உத்தரவாகும். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, டெல்லியில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு தனது முதல் உத்தரவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.