கூகுளுக்கு அபராதம்

கூகுள் நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு மொபைல் சாதன அமைப்பில் தனக்குள்ள ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழும், போட்டி சட்டத்தின் பிரிவு 4ஐ மீறியதற்காகவும் இந்திய போட்டி ஆணையம் கூகுளுக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்களுக்கான உரிமம் பெற்ற ஓ.எஸ் சந்தை, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆப் ஸ்டோர், பொது இணைய தேடல் சேவைகளுக்கான சந்தை, ஓ.எஸ் அல்லாத குறிப்பிட்ட மொபைல் இணைய பிரவுசர்களுக்கான சந்தை, ஆன்லைன் வீடியோ ஹோஸ்டிங் தளம் ஆகிய ஐந்து சந்தைகளில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நியாயமற்ற வணிக நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும். மொபைல் சாதன உற்பத்தியாளர்கள் கூகுளின் செயலிகளில் எவற்றை தங்கள் சாதனங்களில் முன் கூட்டியே இன்ஸ்டால் செய்யலாம் என தேர்வு செய்வதைத் தடுக்கக்கூடாது. கூகுள் தொடர்புடைய செயலிகளை மொத்தமாக இன்ஸ்டால் செய்வதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை நீக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. அபராதம் செலுத்தத் தேவையான நிதி விவரங்கள், அதற்கான ஆவணங்களை வழங்க கூகுளுக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.