சீக்கியர்களின் ஏழாவது குருவானவர் குரு ஹர் ராய். இவர் தனது தாத்தாவும் ஆறாவது சீக்கிய குருவுமான, குரு ஹர்கோபிந்தின் மரணத்திற்குப் பிறகு, தன் 14 வயதில் சீக்கிய குருவானார். தன் 31 வயதில் இறக்கும் வரை சுமார் பதினேழு ஆண்டுகள் சீக்கியர்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டினார். குரு ஹர் ராய் வாழ்க்கை குறித்த குறிப்புகள் வரலாற்றில் அரிதாகவே காணப்படுகின்றன. சில சீக்கிய நூல்கள் அவரது பெயரை ஹரி ராய் என்றும் கூறுகின்றன.
ஆறாவது சீக்கிய குருவினால் உருவாக்கப்பட்ட சீக்கிய வீரர்களை நன்றாக பராமரித்தார் குரு ஹர் ராய். ஆனால், முகலாயர்களுடனான போர்களைத் தவிர்த்தார். முகலாய சிம்மாசனத்திற்கு நடந்த போரில் ஔரங்கசீப் சகோதரர்களில் இவர் ஔரங்கசீப்பின் சகோதரன் தாரா ஷிகோவை ஆதரித்தார். இது குறித்து மக்கள் கேட்டபோது, ‘ஒரு கையால் பூக்களைப் பறித்து, மறுகையால் அதை கொடுத்தால், இரு கைகளும் ஒரே நறுமணத்தைப் பெறுகின்றன’ என்று குரு ஹர் ராய் பதிலளித்ததார்.
ஔரங்கசீப் போரில் வெற்றி பெற்ற பிறகு, தாரா ஷிகோவை தூக்கிலிட்டான். தன் சகோதரனுக்கு ஆதரவு அளித்ததை குறித்து விளக்க குரு ஹர் ராயை அழைத்தான். தன் பிரதிநிதியாக மூத்த மகன் ராம் ராயை டெல்லிக்கு அனுப்பினார் குரு ஹர் ராய். ஔரங்கசீப் ராம் ராயிடம், ஆதி கிரந்தத்தில் உள்ள ஒரு வசனம் குறித்து ராம் ராயிடம் கேள்வி எழுப்பினான். சீக்கிய வேதத்தின் உண்மையை உரைப்பதற்கு பதிலாக ஔரங்கசீப்பை திருப்திப்படுத்த ராம் ராய் பொருளை மாற்றிக் கூறினார். இதை அறிந்த குரு ஹர் ராய் மூத்த மகனை விடுத்து தன் இளைய மகனான ஹர் கிருஷணை எட்டாவது குருவாக அறிவித்தார்.
குரு ஹர் ராயின் பிறந்த தினம் இன்று