குரு தேஜ் பகதூர்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர் தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர்.

காஷ்மீரத்து பண்டிதர்களை இஸ்லாமுக்கு மாற்ற முஸ்லிம் அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் பண்டிதர்கள் அடைக்கலம் நாடி வந்தனர். குரு தேஜ் பகதூரை  மதமாற்றினால் அனைவரும் மதம் மாறுவார்கள் என்பதால் முகலாய அரசு அவரை முகலாய அரண்மனைக்கு வருமாறு ஆணை பிறப்பித்தது. என்ன நடக்கும் என்பதை உணர்ந்த குரு, தன் ஒன்பது வயதான மகன் கோவிந்தசிம்மனை பத்தாவது குருவாக நியமித்து விட்டு டெல்லிக்கு பயணமானார். அவரோடு நண்பர்களான பாய் சதிதாஸ், பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸும் சென்றனர். டெல்லியில் குருவும் அவரது நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். குரு பார்க்கும் வகையில் பாய் சதிதாஸ் எரித்து கொல்லப்பட்டார். பாய் மதிதாஸ் வெட்டிக் கொல்லப்பட்டார். பாய் தயாள்தாஸை கொதிக்கும் நீரில் மூழ்கடித்து கொன்றனர்.

இறுதியாக இஸ்லாத்திற்கு மாறினால் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று குருவிற்கு சொல்லப்பட்டது. தர்மத்தை விடுவதைவிட உயிரை விடுவது மேல் என்று குரு பதிலளித்தார். குருவின் தலையை வெட்டி கொலை செய்தனர் முகலாயர்கள். இவரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறினர். இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடினர். வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும் பலிதானமும் நம்மை என்றும் வழிநடத்தட்டும்.

குரு தேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று.