குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற முடியாது ‘மூச்!’- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

”குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மக்களை தவறாக வழிநடத்துவதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தவிர்க்க வேண்டும். எவ்வளவு போராட்டம் நடத்தினாலும், இந்த சட்டம் வாபஸ் பெறப்படாது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திட்டவட்டமாக கூறினார்.

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக வசித்து, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, நம் நாட்டுக்கு அகதிகளாக வந்த ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கும் வகையில், பா.ஜ., சார்பில், நாடு முழுதும் விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டம் என்பது, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்த வர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக அமல் படுத்தப் பட்டுள்ளது; யாருடைய குடியுரிமையும் பறிப்பதற்காக அமல் படுத்தப்பட்ட சட்டம் அல்ல.

ஆச்சரியம்

குடியுரிமையை பறிப்பது தொடர்பான எந்த விதிகளும், அந்த சட்டத்தில் இல்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இது தொடர்பாக பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்பி, மக்களை தவறாக வழி நடத்துகின்றனர்.

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வரும், சிறுபான்மை ஹிந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது, காங்கிரஸ் தலைவர்கள் பலர், ஏற்கனவே கூறிய விஷயம் தான். ஆனால், இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், வங்கத்தை சேர்ந்த தலித் சமூகதத்தினருக்கு குடியுரிமை அளிப்பதை எதிர்க்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும், அந்த சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. இந்த சட்டம் தொடர்பாக, ஏதாவது ஒரு பொது இடத்தில், என்னுடன் விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் தயாரா…காங்கிரசின் ராகுல், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணமுல் தலைவர் மம்தா ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன்.

குடியுரிமை திருத்த சட்டத்தில், முஸ்லிம் உட்பட, எந்த சமூகத்தினரின் குடியுரிமையையாவது பறிப்பது தொடர்பாக ஏதாவது ஒரு அம்சம் இருக்கிறதா என்பதை அவர்கள் காட்ட தயாரா?ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரஸ் கட்சியினர் மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். மதத்தின் அடிப்படையில், காங்., கட்சியை சேர்ந்தவர்கள் நாட்டை பிரித்தனர்.

புதிய வரலாறு

அப்போது, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதத்தினர் அதிகம் இருந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. அவர்கள் எல்லாம் எங்கு சென்றனர்? அவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது மதம் மாற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு நடந்த இந்த கொடுமைகள் எல்லாம், ராகுலின் கண்களுக்கு தெரியவில்லையா?

காஷ்மீரை பூர்வீகமாக உடைய பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த, ஐந்து லட்சம் பேர், இப்போது அகதிகளாக விட்டனர். இதைப் பற்றி எதிர்க்கட்சியினர் வாய் திறக்க மறுப்பது ஏன்?தற்போது, பிரதமர் நரேந்திர மோடியால், புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்ன கூறுகிறாரோ, அதைத் தான், இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்களும் பேசுகின்றனர். இவர்களுக்கும், இம்ரான் கானுக்கும் என்ன தொடர்பு என, எனக்கு தெரியவில்லை.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி, மூன்று மாதங்களுக்குள் துவங்கும். விரைவில் கட்டப்படவுள்ள ராமர் கோவில், விண்ணை முட்டும் அளவுக்கு அமையும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த கூட்டத்தில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கை, அரசியலமைப்பு கடமைகளில் ஒன்று. மத்தியில், காங்., ஆட்சியில் இருக்கும் போது தான், இந்த நடைமுறை துவக்கப்பட்டது. சில மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமை பதிவேடு தொடர்பான தகவல்களை தெரிவிப்பது கட்டாயமல்ல; ஆனால், தாங்களாக முன் வந்து, பொதுமக்கள் தகவல்களை அளிக்கலாம்.

ரகசியமானது

மத்திய அரசின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் ஆகியவை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக சேகரிக்கப்படும் தகவல்களின் ரகசியம் காக்கப்படும்; இதற்கு, சட்டம் உறுதி அளித்துள்ளது. இதை மீறுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப் படுவர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.