பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக எடுத்ததீர்மானத்தை நிறைவேற்ற வலுவாக முன்னேறிச் செல்கிறது. இதன் விளைவாக, ஜல் ஜீவன் (குழாய் வழி குடிநீர்) இயக்கத்தின் (ஜேஜேஎம்)
கீழ், கிராமப்புறங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்ட குழாய் நீர் இணைப்புகளின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 13 கோடியாக, அதாவது நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.
2023 ஜனவரி 1 முதல், நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக, 87,500 குழாய் நீர்
இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, கோவா, தெலங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் , 100 சதவீத இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் 145 மாவட்டங்களிலும், 1,86,818 கிராமங்களிலும் இதே போல 100 சதவீத இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 15 ஆகஸ்ட் 2019 அன்று, 73வது சுதந்திர தினத்தின் போது, செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜல் ஜீவன்(குழாய் வழி குடிநீர்) இயக்கத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன், ஆகஸ்ட் 15, 2019 நிலவரப்படி, நாட்டில் 3.23 கோடி வீடுகளில் (16.82%) குழாய் நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 5, 2023 நிலவரப்படி, 13 கோடி
வீடுகளில் (67.64%) இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சி காரணமாக, நாட்டில் 9.15 லட்சம் (88.73%) பள்ளிகளிலும், 9.52 லட்சம் அங்கன்வாடி மையங்களிலும்(84.69%) குழாய் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.