ஜம்மு – காஷ்மீருக்கு, 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி, தேசிய அளவில் தீவிர பிரசாரம் செய்ய, பா.ஜ., முடிவு செய்துள்ளது.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு, அரசியல் அமைப்பு சட்டம், 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது.இதையடுத்து, 370வது பிரிவு நீக்கம் பற்றி, தேசிய அளவில் பிரசாரம் செய்ய, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில், இதை முக்கிய பிரசாரமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இது பற்றி, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விபரம், மக்களிடம் சென்றடையும் வகையில், செப்டம்பர், 1 முதல், தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.மாநில தலைநகர்கள், மாவட்ட தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்கள் என, 370 கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள்.இதற்காக, கட்சியின் செயல் தலைவர், ஜே.பி.நட்டா தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில், மத்திய அமைச்சர்கள், பிரகலாத் ஜோஷி, கஜேந்திர சிங் ஷெகாவத், தர்மேந்திர பிரதான், ஜிதேந்திர சிங், உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.