காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்னையை எழுப்பும் சீனாவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தாக்கல் செய்த தீர்மானம் குறித்து விவாதிக்க, மற்ற நாடுகள் மறுப்பு தெரிவித்தன.ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதன் ஓராண்டு நிறைவு, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், காஷ்மீர் விவகாரத்தை, பாகிஸ்தானுக்காக, அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா எழுப்ப முயன்றது. ஆனால், கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில், சீனாவை தவிர, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து, இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஓராண்டில், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்காக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சீனா, மூன்று முறை முயன்று, தோல்வியடைந்து உள்ளது.மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ளதால், இந்த விவகாரத்தின் உண்மையை சீனா புரிந்து கொள்ள வேண்டும்.காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இதில் மீண்டும், மீண்டும் தலையிட்டு, மூக்கை உடைத்துக் கொள்ள வேண்டாம் என, சீனாவை எச்சரிக்கிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து நாடுகளுமே, காஷ்மீர் விவகாரம், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை; அது குறித்து விவாதிக்கத் தேவையில்லை என்று கூறிஉள்ளன’ என, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ். திருமூர்த்தி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.இதற்கிடையே, இந்த முயற்சி தங்களுக்கு கிடைத்த வெற்றியாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ‘காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்ற நிலையில் இருந்து, இரு தரப்பு பிரச்னை என்று, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது. இது நமக்கு கிடைத்துள்ள வெற்றி’ என, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.பாக்.,குக்கு ‘குட்டு’உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதை விமர்சித்து, பாகிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சகத்தின்செய்தித் தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறியுள்ளதாவது:அயோத்தி கோவில் குறித்து, பாக்., விமர்சனம்செய்துள்ளதை ஏற்க முடியாது. அண்டை நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் நாட்டிடம் இருந்து, இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.இருப்பினும், இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. அதில் தலையிட, பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மத மோதலை உருவாக்கும் வகையிலான இது போன்ற முயற்சிகளை, பாக்., நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.