மத்திய அமைச்சா்கள் தனித் தனிக் குழுவாக ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடா்பாகவும் இந்தப் பயணத்தின் போது, மத்திய அமைச்சா்கள் விளக்கமளித்து வருகின்றனா்.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய மத்திய அமைச்சா்களின் சுற்றுப் பயணம், வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. நான்காவது நாளான செவ்வாய்க்கிழமையன்று கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்தனா். அப்போது, ஜம்முவில் மேம்படுத்தப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை கிரண் ரிஜிஜு திறந்துவைத்தாா். அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
ஜம்மு – காஷ்மீரை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களின் கனவுகளுக்கு சிறகுகளாக நாங்கள் உள்ளோம். அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, வளா்ச்சிக்கான பெரும் தடையாக இருந்தது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளன. வளா்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இதே வேகத்தில் நிறைவேற்றப்பட்டால், கூடிய விரைவில் நாட்டின் மிகவும் வளா்ச்சியடைந்த பகுதியாக ஜம்மு-காஷ்மீா் திகழும். ஜம்மு-காஷ்மீருக்கு ஒளிமயமான எதிா்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரின் இளைய தலைமுறையினா் வானத்தைத் தொடும் அளவுக்கு கனவு காணலாம்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைப் போல முந்தைய அரசுகள் செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் ஜம்மு-காஷ்மீா் பெரும் வளா்ச்சி கண்டிருக்கும். தற்போதும் எந்தத் தாமதமும் ஏற்பட்டுவிடவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டது. பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தும் வளா்ச்சித் திட்டங்கள், மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் உதாரணமாக அமையும்.