ஜம்மு – காஷ்மீருக்கான, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த, 144 தடை உத்தரவு நேற்று இரவு விலக்கி கொள்ளப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்பட்டது; மாநிலம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதுபோல, ஜம்மு – காஷ்மீர் மாநில கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்களில் பலர், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்; இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ‘துார்தர்ஷன்’ உட்பட, மூன்று, ‘டிவி’ சேனல்கள் மட்டும் தான் இயங்குகின்றன.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், கடந்த செவ்வாய் கிழமை முதல், காஷ்மீரின் பல பகுதிகளுக்கும் சென்று, அந்த பகுதி மக்களுடன் பேசி, அமைதி வழிக்கு திரும்புமாறு, வலியுறுத்தி வருகிறார். துணை ராணுவப்படையினரை சந்தித்து, காஷ்மீரிகளிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்; என, வலியுறுத்தியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், தொழுகைக்காக குவியும் முஸ்லிம்களால், சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கருதிய, மாவட்ட நிர்வாகம், அந்தந்த பகுதி மசூதிகளில் மட்டும், தொழுகை நடத்திக் கொள்ள அனுமதித்தது. அந்த இடங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கமாக, ஸ்ரீநகரின், வரலாற்று சிறப்பு மிக்க, ஜமா மஸ்ஜித் மசூதியில், சிறப்பு தொழுகை நடக்கும். அதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். அது, நேற்று தடை செய்யப்பட்டது. சாலைகளில், 100 அடி இடைவெளியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டிருந்தது. தடை உத்தரவு அமலில் இருப்பதால், மருத்துவம் போன்ற அவசிய காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.