காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு!

சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, ‘குட்டு’

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனால், கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தில், ஐ.நா., தலையிட வேண்டும் என்றும், பிரச்னையை தீர்க்க, சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும், கோரியது. ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி, மலிகா லோதியும், இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை, ஐ.நா., நிராகரித்துள்ளது.  ஜம்மு – காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை கவனத்தில் வைத்துள்ளோம். இந்த விஷயத்தில், பாக்., – இந்தியா என, இரு தரப்புமே, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா – பாக்., இடையேயான உறவு தொடர்பாக, 1972ல், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில், ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது என்றார் ஐ.நா., பொதுச் செயலர், ஆன்டோனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக்.

அதில், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், இரு தரப்பு பேச்சு மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில், ஐ.நா., உட்பட, மூன்றாவது நபர் தலையீடு தேவையில்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற, பாக்., கோரிக்கையை ஏற்க முடியாது. இரு நாடுகளும் சுமுக பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

ஐ.நா.,வின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தான் தரப்பு, கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி, சீனா சென்றுள்ளார். இந்நிலையில், ‘காஷ்மீர் பிரச்னை குறித்து, இரு தரப்பும், பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும்’ என, சீனா தெரிவித்துள்ளது.

‘ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. என்ன செய்வது என தெரியாமல், பாக்., அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். காஷ்மீர் விஷயத்தில், பொய்யான தகவல்களை கூறி, சர்வதேச நாடுகளையும், ஐ.நா., வையும், பாகிஸ்தான் ஏமாற்ற முடியாது”