மார்ச் 27, 1892 கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்தார் மயில்வாகனன். மதுரைத் தமிழ்ச் சங்கம் வழியாய் பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் இவரே. கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, பணியினூடேயே லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc பட்டம் பெறுவது, மானிப்பாய் ஹிந்துக் கல்லூரியின் அதிபர் பொறுப்பு, திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், முகாமையாளராகக் கடமையாற்றியது என்று அனைத்திலும் சிறப்பான பங்களித்தவர்.
திருகோணமலையில் யாழ்ப்பாணம் ராமகிருஷ்ண மிஷன் உடன் ஏற்பட்ட தொடர்பு பின்னர் இயற்கையாக அவரை துறவற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றது. 1922ல் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னை மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும், 1924ல் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப் பெயரும் பெற்றார். சென்னையில் இருந்த காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி இதழ்களுக்கு ஆசிரியர் பணி, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ பத்திரிகையில் இலக்கியக் கட்டுரைகளை எழுதுவது என்று வாழ்க்கை விரிந்தது. பின்னர், இலங்கை திரும்பி, ராமகிருஷ்ண மிஷன் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931-34 காலத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணி, புராதன தமிழர் இசை ஆராய்ச்சி, ராமகிருஷ்ண மிஷன் அல்மோராமாயாவதி ஆசிரமத்தின் வெளியீடான ‘பிரபுத்த பாரதம்’ இதழின் ஆசிரியர் பணி, 1943 -46, இலங்கையில் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக தமிழ் ஆய்வுத்துறைக்கு திட்டங்களை வகுத்தளித்தல் என்று ஒரு நதியைப் போல இடையில் நிற்காமல் 1947 ஜூலை மாதம் இறை அடி சேரும் வரை வாரி வழங்கியவர் சுவாமி விபுலானந்தர். விபுல் என்ற சொல்லுக்கு மட்டற்ற செழிப்பு, ஆற்றல் என்றெல்லாம் பொருள் சொல்லிக் கொண்டே போகலாம்.
சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினம் இன்று