காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தங்கப் பதக்கங்களை அள்ளினர். ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர், மகளிர், ஒற்றையர், இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.
அஹிகா முகர்ஜி சாம்பியன்
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அஹிகா முகர்ஜி-மதுரிகா பட்கர் மோதினர். இதில் 11-6, 11-4, 11-9, 19-17 என்ற கேம் கணக்கில் வென்ற அஹிகா முகர்ஜி, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். அரையிறுதியில் முதல்நிலை வீராங்கனை ஹோ டின் டின்னை வீழ்த்தியிருந்தார் அஹிகா.
ஹர்மித் தேசாய் சாம்பியன்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய நம்பர் ஒன் வீரர் ஜி.சத்யனும்-ஹர்மித் தேசாயும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-11, 6-11, 11-5, 11-8, 17-15, 7-11, 11-9 என்ற கேம் கணக்கில் போராடி வென்றார் ஹர்மித். முதன்முறையாக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் ஹர்மித் தேசாய். இதற்கு முன்பு மூத்த வீரர் சரத் கமல் மட்டுமே ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
* மகளிர் இரட்டையர் பிரிவிலும் பூஜா-கிருத்விகா இணை சக இணையான ஸ்ரீஜா அகுலா-மெளஸ்மி பால் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
* ஆடவர் இரட்டையர் பிரிவில் அந்தோணி அமல்ராஜ்-மானவ் தாக்கர் இணை சக இணையான சரத்கமல்-சத்யன் இணையை வென்று தங்கப் பதக்கம் வென்றது.
* ஆடவர், மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவு என 7 பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.