காங்கிரஸ் எம்.பி. பதவியேற்க 22 ஓய்வுபெற்ற அதிகாரிகள் எதிர்ப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ்கட்சியின் நசீர் ஹுசேனுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்து வைக்ககூடாது என குடியரசு துணைத்தலைவருக்கு 22 ஓய்வுபெற்ற அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 27-ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலையில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர்ஹுசேன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் நசீர் ஹுசேனை வாழ்த்தி முழக்கம் எழுப்பியதுடன், பாகிஸ்தான் வாழ்க என்றும் முழக்கம் எழுப்பினர்.
இதன் காணொலி கன்னட தனியார் சேனல்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தடய அறிவியல் ஆய்வக (எப்எஸ்எல்) விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். எப்எஸ்எல் அறிக்கையின் அடிப்படையில் 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் 22 ஓய்வுபெற்ற அதிகாரிகள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் நசீர் ஹுசேனுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்துவைக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர். “பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியபோது நசீர் அதைதடுக்கவில்லை. ஊடகப் பிரதிநிதிகளிடம் அவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்” என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.