கலாச்காரத்தை பாதுகாப்போம்

அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள மாதவ் தேவ் சர்வதேச ஆடிட்டோரியத்தில் நடந்த கருத்தரங்கில், ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசிய செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே, அசாம் மாநில தேயிலை தோட்டத் தொழலாளர் சமூகத்தை சேர்ந்த 108 பழங்குடியின பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ‘ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அசாம் மட்டும் இல்லாமல், டிரினிடாட், கயானா போன்ற நாடுகளுக்கும் கடின உழைப்பாளிகளான இந்த பழங்குடி சமூகத்தினர் சென்றனர். தங்கள் உழைப்பு, வியர்வையால் தேசத்தை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பை செய்தனர். எண்ணற்ற சவால்களுக்கு மத்தியிலும் தங்கள் கலாச்சாரத்தையும் மதத்தையும் அவர்கள் மறக்கவில்லை. அது உண்மையில் அவர்களின் அழகு. பல்வேறு மாநிலங்கள், பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட பழங்குடியினரால் அசாம் மாநிலம் ஒரு தனித்துவமான கலவையைப் பெற்றுள்ளது. அது நமது ஒட்டுமொத்த பாரத கலாச்சாரத்தை மேலும் வளமாக்குகிறது. நமது பழமையான கலாச்சாரத்தை பாதுகாப்பதில் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. தேயிலை பழங்குடியினரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பழங்கால தர்ம நம்பிக்கையின் சிறந்த மதிப்புகளை நாம் பேண வேண்டும். மக்களின் பொருளாதார நிலைமைகள் உயரும்போது வாழ்க்கையின் மதிப்பு ஒரு சிறந்த வழியில் புரிந்து கொள்ளப்படுகிறது. தார்மீக வழிமுறைகளின் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்துவது போற்றப்பட வேண்டியதாகும். நெருக்கடி காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அவசியம். ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என கூறினார்.