கலவரத்தை தூண்டும் காங்., ஆம் ஆத்மி – அமித் ஷா ஆவேசம்

“காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், மக்களை தவறாக வழிநடத்தி, டில்லியை கலவரத்தால் எரித்து, பாவம் செய்து வருகின்றன,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசத்துடன் கூறினார்.

காங்., – ஆம் ஆத்மி கட்சிகள், டில்லி மக்களையும், இளைஞர்களையும் தவறாக வழிநடத்தி, கலவரத்தால், தேசிய தலைநகரை எரித்து பாவம் செய்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இங்கு நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும், அவ்விரு கட்சிகளே காரணம். வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அவர்கள் வீட்டிற்கே சென்று, நலன் விசாரித்து வருவது, வெட்கமாக இல்லையா?

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமையை வழங்கும் சட்டத்தை, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். திருத்தப்பட்ட அந்த சட்டத்தில், மக்களின் குடியுரிமையை பறிக்கும் விதிகள் எதுவும் இல்லை. ஆனால், ராகுலும், பிரியங்காவும், நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களை தவறாக வழிநடத்தி செல்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால், சிறுபான்மையினர், தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும் என்று பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு மட்டுமே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது பிரிவை ரத்து செய்த தைரியம் உள்ளது. இப்போது, காஷ்மீரில் மூவர்ண தேசிய கொடி பறக்கிறது. இனி, இந்தியாவில் இருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி, இரட்டை நிலைப்பாடை கொண்டிருந்தது. ஓட்டு வங்கி அரசியலுக்காக, அந்த பிரச்னையில் தீர்வு காணாமல் தாமதம் செய்து வந்தது. ராகுலும், அரவிந்த் கெஜ்ரிவாலும் எது வேண்டு மானாலும் செய்யட்டும்; வானுயர்ந்த கோபுரத்துடன், அயோத்தியில், ராமர் கோவில் விரைவில் அமையும். இவ்வாறு, அவர் பேசினார்.