கர்நாடக முதல்வராக மீண்டும் பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார். இதனையடுத்து கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வாஜுபாய் வாலா எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, முதல்வராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால், குமாரசாமி தலைமையிலான 14 மாதகால ஆட்சி கவிழ்ந்தது.

இந்நிலையில் ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோரியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனெனில் பாஜக ஆட்சிமன்றக்குழு எடியூரப்பாவை தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனையடுத்து அவர் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார்.