கர்த்தார்புரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த சதி?

கர்த்தார்புர் குருத்வாராவுக்கு செல்லும் பாதை திறக்கப்பட உள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதால் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும்படி பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பாக்.,ல் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்த்தார்புர் குருதுவாரா இந்தியர்களுக்காக நவம்பர் 9 ம் தேதி திறக்கப்பட உள்ளது. முதல் பயணிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 150 எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்பட 575 பேர் கர்த்தார்புர் யாத்திரை செல்ல தயாராக உள்ளனர். அனைத்து இந்தியர்களுக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாமலேயே அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கர்த்தார்புரில் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த பாக்., இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கர்த்தார்புர் தொடக்க விழா தொடர்பாக பாக்., வெளியிட்டுள்ள வீடியோவில் மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் தோன்றுகின்றனர். ஓரிடத்தில் பொற்கோவிலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட பிந்தரன்வாலேயின் படம் கொண்ட சுவரொட்டியும் காணப்படுகிறது. இதன் மூலமாக இந்தியாவுக்கு மறைமுகமான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாக்., அரசுக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. கர்த்தார்புர் செல்லும் விவிஐபிக்கள் உள்பட அனைத்து சீக்கியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி பாக்., அரசை மத்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. காலிஸ்தான் விடுதலைப் படை, பாபா கால்சா, லஷ்கர் இ தொய்பா, ஜெய் ஷே முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கர்த்தார்புரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தொடர்பான ஆதாரங்களை பாக்., அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புனிதமான வழிபாட்டுத் தலத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என பாக்.,ஐ மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.