கரும்பலகை சரஸ்வதி பீடம்

மத்தியபிரதேசம் தண்டகாரண்ய பகுதியில் பஸ்தர் மாவட்டத்தில் பெருவாரியாக பழங்குடியினர் எனப்படும் வனவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு ஆசிரமம். அதன் பெயர் ஸ்ரீ சிவானந்த ஆசிரமம். அந்த ஆசிரமத்தில் ஸ்ரீ சதா பிரம்மானந்த சரஸ்வதி சுவாமி என்ற துறவி இருந்தார் ஆழ்ந்த சமய ஞானமும் தத்துவ சிந்தனையும் உள்ளவர் அந்தத் துறவி. அவருடைய நல்ல தன்மை காரணமாக ஆசிரமத்தை சுற்றி திரிந்து கொண்டிருக்கும் . கொடுமையான வன விலங்குகள் கூட சாதுவாக விளங்கின. சுற்றுவட்டாரத்தில் வனவாசி மக்கள் குடியிருப்புகள் இருந்தன. அவர்கள் சுவாமிஜியின் தொடர்பில் இருந்ததனால் நல்ல மக்களாக, சாந்த சுபாவம் உள்ளவர்களாக விளங்கினார்கள், இப்படி இருக்கையில் ஒருநாள் பஸ்தர் மாவட்ட ஆட்சியர் அந்த ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார். அங்கே வனவாசிக் குழந்தைகளுக்கு வகுப்பு நடப்பதை பார்த்தார். அந்த குருகுல சூழ்நிலை அவருக்கு மனநிறைவை தந்தது. “ஆசிரமத்திற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், செய்கிறேன்” என்று அவர் சுவாமிஜியிடம் சொன்னார். எந்த ஒரு தேவையும் இல்லை என்று பதில் அளித்தார் சுவாமிஜி. மீண்டும் ஆட்சியர் வற்புறுத்தவே, சுவாமிஜி சொன்னார், “சரி, ஒரு கரும்பலகை (பிளாக்போர்டு) தேவைப்படுகிறது, அனுபுங்கள்”  ஆட்சியர் சிரித்தார் இவ்வளவு சிறிய விஷயத்தை கேட்கிறீர்களே?” என்று சொன்னார்.

அப்போது சுவாமிஜி, “இதோ பாருங்கள், நீங்கள் இன்று ஆட்சியராக இருக்கிறீர்கள். ஆனால் நீங்களும் பள்ளியில் கரும் பலகையில் படித்து எழுதித்தான் உயர்ந்து இன்று ஆட்சியராக இருக்கிறீர்கள். கரும்பலகை இல்லாமல் இருந்தி ருந்தால் நீங்கள் ஆட்சியராகியிருக்க மாட்டீர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆட்சியர் சிந்தனையில் ஆழ்ந்தார்.  பிறகு கரும்பலகை மட்டுமில்லாமல் ஆசிரமத்திற்கு தேவைப்படும் என்று அவர் நினைத்த பல பொருள் களையும் விவேகானந்தர் அறிவுரை நூல்களையும் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார்.