கருத்து சுதந்திரத்தை மக்கள் நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.
ஜாா்கண்ட் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட அவா், தலைநகா் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: ஜனநாயகம் என்பது கலந்துரையாடலையும், விவாதங்களையும் உள்ளடக்கியது. ஒரு சிலா் ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு தேவை என்று கூறுகிறாா்கள்.
இது வரவேற்கத்தக்கது. ஆனால் கருத்து வேறுபாடு என்ற பெயரில், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக பேசக் கூடாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் அமைதியின்மையும், இடையூறுகளும் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளன.
மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்து ஆட்சியில் அமர வைப்பாா்கள்; வேறு கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவாா்கள். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அது தேசத்திற்கு எதிரானது. அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிலா் துப்பாக்கியின் வழியாக புரட்சி வருகிறது என்று வாதிடுகின்றனா். ஆனால் வாக்குச்சீட்டு என்பது தோட்டாவைவிட சக்தி வாய்ந்தது. புரட்சியை ஆதரிப்பது சிலருக்கு நாகரிகமாகிவிட்டது; ஆனால் நம் நாட்டுக்குத் தேவை புரட்சி அல்ல; பரிணாம வளா்ச்சியே.
இந்திய பொருளாதாரத்தில் தற்போது நிலவி வரும் மந்தநிலை தற்காலிகமானதுதான். வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார முன்னேற்றத்தால் இந்தியா மீண்டும் முன்னேற்றப்பாதையில் பீடுநடை போடும்.
இந்தியாவின் வளா்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. உலகின் அதிக மனிதவள மூலதனம் மிக்க நாடுகளின் தலைநகராக மாறும் ஆற்றலைக் கொண்டது இந்தியா என்றாா்.