படத்தில் உள்ள சீனப் பெண்கள் 1,100 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நிலவிய நடை உடை பழக்கவழக்கத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நெற்றியில் அழகாக காட்சியளிக்கும் திலகத்தைப் பாருங்கள். உலகத்தில் எந்த எந்த மூலைகளில் எல்லாம் எத்தனை காலமாக ஹிந்துத்துவம் ஆழ்ந்த முத்திரை பதித்திருக்கிறது என்பது விளங்கும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அந்த நாட்டில் கம்யூனிசம் அலையடித்த தெல்லாம் மேலோட்டமானது என்பதை ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை நேருக்குநேர் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். சென்ற மாதம் சீனா சென்று மக்களின் மங்காத மத நம்பிக்கையை நேரடி சாட்சியாக பார்த்துவிட்டு வந்த விஜயபாரதம் வாசகர் ஒருவர் நம் வாசகர்களுக்காக தந்துள்ள தகவல்கள் இவை:
புத்தர் தான் அங்கே கடவுள். ஆனால் அவரை சீன வெகுஜனங்கள் சாக்கியமுனி என்று அழைக்கிறார்கள். 50 அடி உயர விக்கிரகங்கள் உள்ள ஆலயங்கள் ஆங்காங்கு சமவெளிகளிலும் மலைகளிலும் காட்சியளிக்கின்றன. சன்னிதியின் இருபுறமும் ஆனந்தா ஜெயா என்ற இரண்டு விக்கிரகங்கள். ஆனந்தா, நோயிலிருந்து குணம் தருவார்; ஜெயா சுபிட்சம் தருவார். மத்தியிலுள்ள சாக்கியமுனியிடம் மக்கள் தங்களுக்கு வேண்டியதை பிரார்த்தித்துக் கொண்டு இந்திய முறையில் கரங்கூப்பி, ஊதுபத்தி சமர்ப்பித்து, தலை வணங்கி நிமிர்கிறார்கள். சன்னிதியில் நேர்த்திக்கடன் செலுத்துவதும் நம்மூர் போலவே! சீனாவே இப்படிப்பட்ட உள்ளம் கொண்ட மக்களால் தான் நிரம்பியிருக்கிறது.
அந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லை என்று எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்சியின் தேசிய அளவிலான தலைவர், அந்த நாட்டின் அதிபர் ஷி ஜின் பிங், பக்தியோடு சாக்கியமுனி சந்நிதிக்கு வந்து போகிறார்; தலைநகர் பீஜிங்கிலிருந்து தொலைதூரத்திலுள்ள கிராமத்தில் உள்ள மலையுச்சி புத்தர் கோயிலுக்கு அவர் வருவது உண்டாம். அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். அவரது இளம் வயதில் தாயாருடன் அந்த புத்தர் கோயிலுக்கு அவர் வந்தபோது அங்கிருந்த ஒரு மூத்த புத்தபிட்சு, “வா வா, நீ இந்த தேசத்திற்கு ராஜா ஆகப் போகிறாய்” என்று சொன்னாராம். அது அப்படியே பலித்து விட்டது. அப்புறம் என்ன, சீன அதிபர் பரம பக்தர் ஆகிவிட்டார்.
திருக்கோயில் வழிபாடு விஷயத்தில் சீனர்கள் பிரதட்சிணம், நமஸ்காரம் ஆகியவற்றை அப்படியே கடைப்பிடிக் கிறார்கள். புண்ணிய க்ஷேத் திரங்களில் கோயிலுக்கு வரும் யாத்ரீகர்களுக்கு தங்க இடமும் உணவும் வழங்கும் சத்திரங்கள் இருப்பதுபோல, சீனாவிலும் கோயிலை அடுத்த பகுதிகளில் சத்திரங்கள் இன்றும் காணப்படுகின்றன.
சீனாவில் உள்ள நதிகள் பெரும்பாலானவற்றை இணைத்திருப்பதால் அங்கே தண்ணீர்த் தட்டுப்பாடு கிடையாது என்கிறார்கள். மிகப் பரந்த நிலப்பரப்புகொண்ட சீனாவில் ஏராளமான பேச்சுவழக்கு மொழிகள் நிலவின. தாங்கள் ஒரே தேசமாக அடையாளப்படுத்தப் படுவதற்காக மண்டாரின் மொழியை சீனர்கள் இன்று அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள். ஒரு வீட்டில் தாத்தா பழைய பேச்சு மொழி மட்டுமே அறிந்தவர்; அப்பா பழைய பேச்சுமொழியும் மண்டாரினும் அறிந்தவர்; பேரன் மண்டாரின் மட்டுமே அறிந்தவன் – — இப்படி மாறியிருக்கிறது சீனா.
அதெல்லாம் சரி. ஆனால் நாடு பிடிக்கும் வெறிபிடித்து அலையும் சீன ராணுவத்தையும் சீன வியாபார தந்திரத்தின் எமகாதக வீச்சையும் தேச பக்தியுள்ள எந்த இந்தியனாலும் மறக்க முடியுமா?