ஸ்ரீவைகுண்டம் – இது இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. வைணவர்கள் போற்றி வணங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமிரபரணி நதியினால் வளம் பெற்ற ஊர். 400 ஆண்டுகளுக்கு முன் இங்கு சிகாமணிக் கவிராயரும் அவரது மனைவி சிவகாம சுந்தரியும் வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆனபிறகும் கூட, மகப்பேறு வாய்க்கவில்லை. இருவரும் தீவிர முருக பக்தர்கள். பிள்ளை வரம் வேண்டி முருகனை வேண்டித் தவமிருந்தார்கள். அதன் பலனாக, ஓர் ஆனித் திங்களில், திருவாதிரை நாளிலே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆசையோடு ‘குமரகுருபரன்’ என்று பெயர் சூட்டினர்.
குமரகுருபரனுக்கு ஐந்து வயதாகியது. ஓடியாடி விளையாடி அட்டகாசம் செய்தான். ஆனால் பேச்சு மட்டும் வரவேயில்லை. இதனால் மனமுடைந்த பெற்றோர், முருகனை வேண்டி கண்ணீர் சிந்தினர். குழந்தை குமரகுருபரனைத் தூக்கிக் கொண்டு திருச்செந்தூர் சென்றனர். சூரனை வதைத்த சுப்பிரமணியனின் சந்நிதியிலே குமரகுருபரனைக் கிடத்தினர். உணவு, உறக்கம் இன்றி முருகனை நோக்கி விரதம் இருந்தனர். தம்மை வணங்குவோர் படும் துயரம் கண்டும் தாமதிப்பானா அந்த தயாநிதி?
குழந்தையின் நாக்கிலே வேல் நுனி கொண்டு எழுதினான் குமரன். குமரகுருபரன் பேசத் தொடங்கினான். பேச மட்டுமா தொடங்கினான்? கவி மழை பொழிந்தான். கந்தர் கலிவெண்பா பாடினான்.
குமரகுருபரர் பிற்காலத்தில் துறவறம் ஏற்று, காசி சென்று, அங்கு ஒரு மடம் நிறுவி தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்