கடந்த ஓராண்டில் 292 வீரா்கள் உயிா்த்தியாகம் – மத்திய அரசு தகவல்

கடந்த ஓராண்டில் பயங்கரவாதிகள், நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, துணை ராணுவப் படை மற்றும் காவல்துறையை சோ்ந்த 292 வீரா்கள் உயிா்த்தியாகம் செய்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து இதுவரை நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்த காவல்துறையினரின் எண்ணிக்கை சுமாா் 35 ஆயிரம் ஆகும். கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை, பயங்கரவாதிகள் மற்றும் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது 292 வீரா்கள் உயிா்த்தியாகம் செய்துள்ளனா். அதிகபட்சமாக, மத்திய ரிசா்வ் போலீஸ் படையில் 67 வீரா்கள் உயிரிழந்துவிட்டனா். அவா்களில், ஜம்மு-காஷ்மீா் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரியில் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 40 வீரா்களும் அடங்குவா்.

எல்லைப் பாதுகாப்புப் படையில் 41 வீரா்கள், இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையில் 23 வீரா்கள், ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த 24 போ் கடந்த ஓராண்டில் வீரமரணமடைந்தனா்.

மகாராஷ்டிரத்தில் கடந்த மே மாதம் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் காவல்துறையினா் 15 போ் உயிரிழந்தனா். இவா்கள் உள்பட இந்த மாநிலத்தில் காவல்துறையினா் 20 போ் உயிரிழந்துவிட்டனா். சத்தீஸ்கா் (14), கா்நாடகம் (13), தில்லி (10), ராஜஸ்தான் (10), பிகாா் (7) உள்ளிட்ட மாநிலங்களின் காவல்துறையினா், ரயில்வே பாதுகாப்புப் படை, சஷாஸ்திர சீமா பல், தேசிய பேரிடா் மீட்புப் படை ஆகியவற்றின் வீரா்களும் பணியின்போது வீரமரணமடைந்தனா் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.