ஒரு வீட்டுக்கு நான்கு காரா?

மஹாராஷ்டிராவின் தலைநகரான மும்பை, கடும் போக்குவரத்து நெரிசல், வாகனம் நிறுத்த போதிய இட வசதி இன்மை, வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு என அல்லல் படுகிறது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் நிறுவனங்கள், கார் நிறுத்தும் இடத்தை குறைத்துக் கொள்ள மாநில அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செயப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘புதிய கார்கள் வாங்குவது குறைக்கப்பட வேண்டும். வாகன நிறுத்த வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒரு குடும்பத்தினர் 4 அல்லது 5 கார்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. வாகன நிறுத்துமிடம் குறித்து முறையான கொள்கை வகுக்கப்படவில்லை எனில், எதிர்காலத்தில் மிகப் பெரிய குழப்பம் ஏற்படும். பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக வாகனங்களை வாங்கி குவிக்கக் கூடாது’ என்று தெரிவித்தனர்.