பாரத நாட்டை சேர்ந்த விபின் குமாருக்கு ருமேனியா நாட்டின் கௌரவ குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், உறைந்த ஏரியில் 5 வயது சிறுமி தவறி விழுந்தாள். அந்த சிறுமியை மீட்டு, மீட்பு குழு வரும் வரை சுமார் 30 நிமிடங்கள் உறைபனியில் அந்த சிறுமியை தனது தலைக்கு மேலே தாங்கி பிடித்து காப்பாற்றினார் இவர். இது செய்தி. வெளிநாட்டுக்காரர் என்றாலும் தங்கள் நாட்டுக்கு நல்லது செய்தார்; அதனால் ருமேனியா அவருக்கு கௌரவ குடிமகன் விருது வழங்கியது.
சட்டவிரோதமாக நம் நாட்டில் ஊடுருவியுள்ள வெளிநாட்டவர்களான வங்கதேசிகள் நம் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற நிலை பாரதத்தில் உருவாகியுள்ளதால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் காட்சியை அண்மைக்காலமாக அதிகமதிகமாக காண்கிறோம். மேற்குவங்க மாநிலத்திலும், அஸ்ஸாமிலும் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான வங்கதேசிகள் வெளியேற்றப்பட்டு வந்தாலும் கர்நாடகா, குஜராத், ஏன் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் வங்கதேசிகள் சட்டவிரோதமாக குடியேறி விட்டார்கள். இது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து. எனவே காவல்துறையும் பயங்கரவாத ஒழிப்பு படையும் இவர்களை கண்டறிந்து வெளியேற்றுவதில் ஈடுபடுகிறார்கள். கேரளத்தில் பிடிபட்ட வங்காள மொழி பேசும் சில நபர்களின் செல்போனில் வங்கதேச அடையாள அட்டை விவரங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அரசு போலவே பொதுமக்களும் இதில் பங்கேற்க வேண்டும். சென்ற வாரம் கர்நாடகாவிலும், குஜராத்திலும் ஏராளமான வங்கதேசிகளை கண்டறிந்து பிடித்து காவல்துறையிடம் பொதுமக்களே ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழக மக்களும் விழித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் திருப்பூர், ஈரோடு, சேலம் மட்டுமல்லாமல் சட்டவிரோத குடியேறிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்ற நிலை இங்கே உருவாகி வருகிறது.
குறிப்பாக, திருப்பூர் தொழிலகங்களில் சட்டவிராத குடியேறிகள் என்.ஐ.ஏயிடம் பிடிபட்டு நாடு கடத்தப்பட்டார்கள். இதையடுத்து ஏற்றுமதியாளர் சங்கங்கள் இனி வேலைக்கு ஆள் எடுக்கும் போது நபர்களின் அடையாள விவரங்களை தீவிரமாக சரி பார்க்கத் தீர்மானித்திருக்கிறார்கள்.
சட்டவிரோத குடியேறிகள் பொது இடங்களை ஆக்கிரமித்து குடிசை போட்டுக் கொண்டு உள்ளூர் மக்களுக்கு பல விதங்களில் தொல்லை கொடுப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. வீடுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் விவரம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. இத்தனைக்கும் வீடு வாடகைக்கு விடுகிறவர்கள் குடித்தனக்காரர்கள் பற்றிய விவரத்தை காவல் நிலையத்தில் தெரிவிப்பது கட்டாயம் என்பது சட்டம். அதை முழுமையாக கடைபிடிப்பது நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் நல்லது.