ஒடிஸாவில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) புதுப்பிப்பதற்கான நடைமுறையை, அந்த மாநில அரசு தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக மாநில அரசின் உயரதிகாரி ஒருவா்,
இந்திய தலைமைப் பதிவாளரின் அறிவுறுத்தல்களின்படி, ஒடிஸாவில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் சோதனை அடிப்படையில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் சென்று, கணக்கெடுப்பு நடத்தும் பணி வரும் ஏப்ரல் மத்தியில் தொடங்கும்.
கடந்த 2010-ஆம் ஆண்டை போல் இல்லாமல், தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான படிவம் கூடுதல் விவரங்களை பெறும் வகையில் உள்ளது. இதேபோல், படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்படும்.
மேலும், பெற்றோா்கள் பிறந்த இடம், தேதி, தாய்மொழி உள்ளிட்ட விவரங்களும் பெறப்பட உள்ளன. ஒடிஸாவில் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பயற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) அமல்படுத்தும் திட்டத்துக்கும் எதிா்ப்பு நிலவி வரும் சூழலில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
என்ஆா்சி நடவடிக்கைக்கான முதல் படியாகவே, தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கப்படுவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், என்ஆா்சிக்கும், என்பிஆருக்கும் எந்த தொடா்பும் இல்லை; அரசின் நலத் திட்டங்களின் பலன்களை மக்கள் முறையாக பெறுவதற்காகவே என்பிஆா் புதுப்பிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.