ரயில் தண்டவாளங்களை நாம் கண்டிருப்போம். அது போடப்பட்டு பல வருடங்கள் ஆனாலும் துரு பிடிக்காமல் அப்படியே இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? சாதாரண இரும்பு சக்கரத்தைக் காட்டிலும் அலாய் சக்கரங்களை வாகன ஓட்டிகள் அதிகம் விரும்புவதை அறிந்திருப்பீர்கள்.
ரயில் தண்டவாளமும் சரி அலாய் சக்கரங்களும் சரி, ஒரு உலோகத்தால் ஆனதல்ல. இரும்புடன் ஒரு சில உலோகங்கள் சேர்த்து உருவாக்கப்படுகின்றன. இதனால்தான் அவை இரும்பைவிட வலிமையானதாகவும் எடை குறைவாகவும் துரு பிடிக்காமலும் இருக்கிறது.
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சிலைகள் இன்றும் தன்மை மாறாது இருக்கக் காரணமும் இந்த அறிவியல் விந்தை தான்.
இன்றளவிலும் ஐம்பொன் சிலைகள் மரபுவழி கலைஞர்களால், கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் அதிகமாக செய்யப்படுகின்றன. ஏன் குறிப்பாக இந்த பகுதிகளில் மட்டும்? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஐம்பொன் சிலை செய்வதற்கு முன் அதன் மாதிரியை மெழுகினால் கலைஞர் உருவாக்குவார். பின்னர் காவிரி படுகை மண்ணை அதன் மேல் பூசி தீயிலிடுவார். மெழுகு உருகிய பின் அந்த அச்சில் இரும்பு தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகக் கலவையை ஊற்றுவார். பின்னர் மண் உடைக்கப்பட்டு சிலை எடுக்கப்படும். சிற்ப கலைஞர்களால் மெருகேற்றப்பட்டு முழுமை பெறும்.
பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. வெள்ளி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும், உடல் உஷ்ணத்தை தனிக்கும். இதனால் தான் குழந்தைகளுக்கு வெள்ளி பொருட்களில் உணவளிக்கின்றோம். ஆபரணங்களாகவும் பயன்படுத்துகின்றோம். இதேபோல தங்கம், தாமிரம் துத்தநாகம், இரும்பும்கூட மருத்துவ குணங்கள் உடையது.
விலை உயர்ந்த உலோகமான தங்கம், வெள்ளியில் சிலை செய்தால் திருடு போய்விடலாம். இரும்பில் செய்தால் துரு பிடிக்கும். ஆனால் இந்த ஐந்து உலோகங்களால் செய்யும் பஞ்சலோக சிலையானது திடமாகவும் துரு பிடிக்காமலும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இவை மின்காந்த சக்தியின் சிறந்த கடத்தியும் ஆகும். இவ்வகை சிலைகளின் அபிஷேக நீரானது அதிக நேர்மறை சக்தியுடன் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
உற்சவ மூர்த்திகளாக நம் கோயில்களில் நாம் வழிபடுவது தெய்வத்தை மட்டுமல்ல நம் முன்னோர்களின் அறிவியல் வளர்ச்சியையும் தான்.
டாக்டர். பிரவீன் ராஜ்குமார்