ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதாக இதுவரை தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது

 

ஐஎஸ் அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் குண்டுவெடிப்பை அரங்கேற்றியது இந்த அமைப்பு தான். உலகின் பல்வேறு நாடுகளும், ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றன. இந்தியாவிலும் இந்த அமைப்புடன் தொடர்பில் இருப்போரை கைது செய்து, பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

 ஐ.ஜி., அலோக் மிட்டல்

இது குறித்து தேசிய விசாரணை ஆணையத்தின் ஐ.ஜி., அலோக் மிட்டல் கூறியதாவது: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததாக நாடு முழுவதும் இதுவரை தமிழகத்தை சேர்ந்த 33 பேர், உ.பி.,யில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் என மொத்தம் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஜஹ்ரான் ஹாசிம் என்ற ஐஎஸ் பயங்கரவாதி முக்கிய குற்றவாளியாக இருந்தார். அவருடன், கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் தொடர்பில் இருப்பதும் ஹாசிம் சம்பந்தப்பட்ட வீடியோவில் தெரிந்தது. ஐஎஸ் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருப்போரை தொடர்ந்து கண்காணித்து கைது செய்யப்படுவர். இவ்வாறு அலோக் மிட்டல் கூறினார்