சவுதி அரேபியா அருகில் இருக்கும் இஸ்லாமிய நாடு ஏமன். 1990-ம் ஆண்டு இந்த நாட்டின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக ஹுசைன் பக்ருதீன் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் ‘அன்சார் அல்லா’ என்ற ஆயுதம் ஏந்தி போராடும் இயக்கம். அன்சார் அல்லா என்பதற்கு ‘கடவுளின் ஆதரவாளர்கள்’ என்று பொருள்.
அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஆதரவாக அதிபர் அலி அப்துல்லா சலே செயல்படுவதால், ஏமன் நாட்டு இறையாண்மை பாதிக்கப்படுவதாக கூறி, வடக்கு ஏமன் பகுதியில் அன்சார் அல்லா இயக்கம் தொடங்கப்பட்டது. அரசு படைகளுக்கு எதிராக இவர்கள் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தினர்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்த இயக்கம் பெரும் வளர்ச்சி அடைந்தது. அதைக் கட்டுப்படுத்த நினைத்த ஏமன் அரசு, அன்சார் அல்லா இயக்கத்தை தொடங்கிய ஹுசைன் பக்ருதீனை 2004-ம் ஆண்டு கொலை செய்தது. அதன் பின்னர் இந்த இயக்கத்தை ஹுசைன் பக்ருதீனீன் தம்பி அப்துல் மாலிக் வழி நடத்தினார்.
ஏமனில் தீவிர செயல்பாடு
இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. அதை மையப்படுத்தியே அவர்களின் போராட்டமும் இருந்தது. தற்போதும் அன்சார் அல்லா அமைப்பு ஏமனில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அடுத்த சில ஆண்டுகளில் அன்சார் அல்லா என்ற அமைப்பு வங்க தேசத்தில் பரவ ஆரம்பித்தது. அன்சருல்லா பங்களா டீம் (ஏபிடி) என்ற பெயரில் ஒரு குழுவாக செயல்பட்ட அவர்கள் வங்கிக் கொள்ளை, கொலை, கடத்தல் என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது நிதி ஆதாரத்தை அதிகரித்துக் கொண்டனர்.
2010-ம் ஆண்டில் இந்த அமைப்பு இந்தியாவில் பரவத் தொடங்கியது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் இந்த அமைப்பினர் ரகசியமாக செயல்படத் தொடங்கினர். இது குறித்து உளவுப் பிரிவினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதனடிப்படையில் இந்த அமைப்பைச் சேர்ந்த 5 பேரை தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பிஹார் மாநிலத்திலும் இந்த அமைப்பைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இயக்கம் அல்கொய்தாவின் முதன்மையான துணை இயக்கமாக கருதப்படுகிறது.
சவுதி அரேபியா எச்சரிக்கை
‘அன்சார் அல்லா’ என்ற வார்த்தை தமிழில் ‘அன்சருல்லா’ என்று மாறிவிட்டது. தமிழகத்திலும் இந்த அமைப்பினர் செயல்பட்டு வருவது, சவுதி அரேபியா அரசு எச்சரித்த பின்னரே தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான் இதுவரை 16 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.
தீவிர விசாரணை
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்சருல்லா அமைப்பின் அடிப்படை கொள்கையாக இருக்கும் இஸ்லாமிய சட்டத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அன்சருல்லா அமைப்பு குறித்து இந்தியா முழுவதும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.