தமிழகத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு  இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய மாவட்டங்களாக உள்ளன.

பழம்பெரும் நகரம்: இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாக பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசு ஆகியோரின் ஆதிக்கத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்ட அந்தப் பகுதியானது, 1997-ஆம் ஆண்டு வரையில் செங்கல்பட்டு-எம்.ஜி.ஆர். மாவட்டமாக இருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் 1997-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியன்று செங்கல்பட்டு மாவட்டமானது இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் என இரண்டு மாவட்டங்களாக உதயமானது.

இப்போது காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், செய்யூர்  ஆகிய எட்டு வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்கள் இப்போது பிரிக்கப்பட்டு செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.

தென்காசி மாவட்டம்: திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருப்பது தென்காசி.தென்காசி நகரத்தில் 33 வார்டுகள் உள்ளன. இதனை தலைமையிடமாகக் கொண்டும் புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

தென்காசியைச் சுற்றிலும் மிகவும் புகழ்வாய்ந்த பாரம்பரியமிக்க இடங்கள் உள்ளன. செங்கோட்டை, கடையநல்லூர், சுற்றுலாத் தலமான குற்றாலம், ஆய்க்குடி, மேல் அகரம், சாம்பார் வடகரை, இலஞ்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன. மேலும், கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியாகவும் அது விளங்கி வருகிறது.

தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்தன. ஜனவரியில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது புதிதாக, தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப் படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை, 35 ஆக உயர உள்ளது.