ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவலை 30ம்- தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்திருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தள்ளு படி செய்தது. அதற்கு அடுத்த நாளில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை 26-ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிபிஐ காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்திடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி சிதம்பரத்தின் சிபிஐ காவலை 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், முன்ஜாமீன் கோரி கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.
சிபிஐ விசாரணை நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு எதிராக பிறப்பித்த கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைப் பட்டியலிடப்படவில்லை.
அதேசமயம் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனனை நாளை வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.