ஏக்நாத் ராமகிருஷ்ண ரானடே, பள்ளிப் பருவத்திலேயே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் சேர்ந்து, 1956 முதல் 1962 வரை அதன் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். சுவாமி விவேகானந்தரின் போதனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரது எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக எழுதினார். 1914ம் ஆண்டு, நவம்பர் 19ம் தேதி, மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தில், திம்தலாவில் பிறந்தார். 1920ல், நாக்பூர் பிரதானவிஸ்புரா பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், 1932-ல் நியூ இங்கிலீஷ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, 1945ல் ஜபல்பூரில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் பயின்றார்.
பள்ளிப் பருவத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிறுவனரான ஹெட்கேவாரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ரானடே, 1926ல் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தார். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் பணியாற்றிய பிறகு, 1938ல், மத்தியப் பிரதேசத்தின் மகாகோஷல் பகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1948ல் மகாத்மா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, தடையை நீக்க குருஜி தலைமையில் சத்தியாகிரகம் நடந்தது. ரானடே, உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார்.
தடையை நீக்க, ஆர்.எஸ்.எஸ் ஒரு எழுத்துப்பூர்வமான அரசியலமைப்பை ஏற்படுத்த வேண்டுமென படேல் வலியுறுத்தினார். ரானடே, ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்கினார். ஆர்.எஸ்.எஸ் மீது விதிக்கப்பட்ட தடை, 1949ம் ஆண்டு, ஜூலை 11 அன்று தடை நீக்கப்பட்டது. 1950ம் ஆண்டில், வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் ஆகியவற்றை உள்ளடக்கிய பூர்வாஞ்சல் பகுதியில் முழு நேர ஊழியராக பணியாற்றினார். 1953ம் ஆண்டில், ரானடே, அகில பாரத பிரச்சார பிரிவின் தலைவரானார். 1956 முதல்
ஆர்.எஸ்.எஸ்.ஸின் பொதுச்செயலாளராக இருந்தார்.
1892 டிசம்பரில் கன்னியாகுமரி நடுக்கடலில் விவேகானந்தர் 3 நாட்கள் தியானம் செய்த பாறையில் நினைவுச்சின்னத்தை உருவாக்க, குருஜியின் வழிகாட்டுதலோடு, `விவேகானந்தர் பாறை நினைவக அமைப்புக் குழு’வை நிறுவி, பணிகளை துவங்கினார். அப்போது கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்த ஹுமாயூன் கபீர் அதை நிராகரித்தார். நாடாளுமன்றத்தின் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெற்று, மனு அளித்த பின்னர், இறுதியில் பிரதமர் இந்திரா காந்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, விவேகானந்தர் பாறை நினைவகம் கட்டுவதற்காக மக்கள் பங்கேற்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது நன்கொடையாக வழங்குமாறு அவர் ஊக்குவித்தார்.
1963–72 காலகட்டத்தில், `விவேகானந்தர் பாறை நினைவகம்’ கட்டுவதற்கான அமைப்புச் செயலாளராக பணியாற்றிய ரானடே, 1978ல் அதன் தலைவரானார். 22 ஆகஸ்ட் 1982 அன்று, சென்னையில் மாரடைப்பால் காலமானார். மறுநாள் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தபுரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.