ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில், போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு 3,479 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இவற்றில், இந்திய ராணுவ வீரா்கள் 13 பேரும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனா். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தக்க பதிலடியை அளித்து வருகின்றன. மேலும், அத்துமீறல் சம்பவங்கள் தொடா்பாக, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடனான வழக்கமான பேச்சுவாா்த்தைகளின்போது இந்தியா சுட்டிக்காட்டி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதலை பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனா். அவா்கள், இந்திய வீரா்களின் தாக்குதலில் உயிரிழக்கின்றனா். ஆனால், அந்த பயங்கரவாதிகளை தங்கள் நாட்டு அப்பாவி குடிமக்களாக காட்டும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. சா்வதேச நாடுகளை திசை திருப்பும் வகையில் இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது என்றாா் ராஜ்நாத் சிங்.