சிறுவயதில் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்த எம்.ஜி.ஆர், பின்னாளில், தன்னைப்போல யாரும் எதிர்காலத்தில் பட்டினி கிடக்கக் கூடாது என்று எண்ணினார். அந்த உணர்வுதான் பிற்காலத்தில் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. காமராஜர் ஆட்சியிலேயே மதிய உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றாலும், அதை செம்மைப்படுத்தி மெருகேற்றியது எம்.ஜி.ஆர். தான்..
எம்.ஜி.ஆர். திரையில் நடித்தவரே தவிர, பொதுவெளியில் நடிக்கவில்லை. தன்னால் யாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர். தி.மு.கவில் இருந்தபோதுகூட தன்னை நாத்திகன் என்று அவர் ஒருபோதும் கூறியதில்லை.
கிருபானந்தவாரியார் ஆற்றிய சொற்பொழிவு காரணமாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது கல்வீசும் நிலை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த எம்.ஜி.ஆர், நேரடியாகத் தலையிட்டு மோதலை தணித்தார். இதனால், தான் ‘பொன்மனச் செம்மல்’ என்ற மகுடத்துக்கு பொருந்தமானவர் என்பதை நிரூபித்தார்.
எம்ஜிஆரின் இஷ்ட தெய்வம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன். திரைப்பட நிறுவனம் ஒன்று எம்.ஜி.ஆருக்கு அரை கிலோ எடையில் தங்க வாள் பரிசளித்தது. இதனை மூகாம்பிகை கோயிலுக்கு எம்.ஜி.ஆர் காணிக்கையாக அளித்தார். இப்போதும் இந்த தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கோயிலை அலங்கரிக்கிறது. ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற தனது ஆனந்த விகடன் தொடரில் ஹிந்துக்கள் போற்றும் பசுவை பாதுகாப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரும் முன்பும் வந்த பிறகும் அவர் மத பாரபட்சத்தை என்றும் காட்டியதில்லை. பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களை ஒதுக்கி தள்ளுவதோ, சிறுபான்மையினர் என்பதற்காக முஸ்லிம் கிறிஸ்தவர்களை தாஜா செய்யவோ எம்.ஜி.ஆர் நினைத்ததில்லை.
சர்ச்சுகளுக்கும் மசூதிகளுக்கும் அரசு பணத்தை எம்.ஜி.ஆர் வாரி வழங்கியதில்லை. ஆனால் ஹிந்து கோயில்களுக்கான நடைமுறைகள் தடையின்றி நடைபெற வழிவகை செய்தார். காரணம், ஹிந்து ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. எனவே திருப்பணிகளை செய்வது அரசின் கடமை. சர்ச்சுகளும் மசூதிகளும் அப்படியல்ல. அவற்றுக்கு கோடிக்கணக்கில் சொத்து உண்டு. அதைக்கொண்டே அவற்றை செம்மையாக நிர்வகிக்க முடியும்.
எம்.ஜி.ஆர். மெத்தப்படித்த மேதாவி அல்ல. ஆனால் மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் ‘மக்கள் திலகம்’ என்ற பெயர் இன்றுவரை அவருக்குப் மட்டுமே பொருத்தமாக உள்ளது.
மொத்தத்தில் எம்.ஜி.ஆர். போன்ற ஒரு முதல்வர் அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்களுக்கு வாய்க்கவில்லை.